பெங்களூரில் 'நம்ம சைக்கிள்' வாடகை திட்டம் அறிமுகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலையும், எரிபொருள் தட்டுப்பாட்டையும் குறைக்கும் வகையிலும் மாநகரங்களில் சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழக வளாகத்தில் "நம்ம சைக்கிள்" என்ற பெயரில் முன்னோடி திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மத்திய நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு, இந்திய அறிவியல் கழகம், ரைடு எ சைக்கிள் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன. குப்பி லேப்ஸ் நிறுவனம் ஆன்லைனில் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் இதற்கான இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து அதிலிருந்து அடையாள குறியீடு மூலம் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் இருக்கும் நம்ம சைக்கிள் நிலையங்களில் வாடகை சைக்கிள்களை பெற முடியும். எந்த இடத்திற்கு செல்கிறீர்களோ அங்கு அருகில் இருக்கும் நிலையத்தில் சைக்கிளை விட்டு செல்ல முடியும் என்பதே இதன் சிறப்பு.
சைக்கிளை எடுத்த இடத்தில்தான் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை இருக்காது என்பதால் அனைவருக்கும் மிகுந்த பயன் தரும் என நம்ம சைக்கிள் கூட்டு அமைப்பு நம்புகிறது. தற்போது இந்த திட்டம் 2 கிமீ சுற்றளவுக்கு செயல்படுத்தப்படுகிறது.
மாநகராட்சி ஒத்துழைப்பு அளித்து சைக்கிள் செல்வதற்கான தனி பாதைகள் அமைக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை பெங்களூர் முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரைடு எ சைக்கிள் பவுண்டேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக, குறைந்த கட்டணமே வாடகையாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்திற்காக சென்னையை சேர்ந்த டிஐ சைக்கிள்(பிஎஸ்ஏ) நிறுவனம் 150 சைக்கிள்களை வழங்கியுள்ளது. இந்த திட்டம் சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நகர்ப்புற போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. நாட்டிலேயே ஒரு நிறுவன வளாகத்தில் இந்த திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








