ராயல் என்பீல்டு சிஇஓ வெங்கி பத்மநாபனுடன் சிறப்பு நேர்காணல்

பெங்களூரில் புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தும் விழா இன்று நடந்தது. இதில், ராயல் என்பீல்டு தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) வெங்கி பத்மநாபன் கலந்து கொண்டார். விழாவிற்கு பின் டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,"வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளோம்.
புதிய தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிளுக்கான புக்கிங் துவங்கப்பட்டுவிட்டது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரியும் கொடுக்கப்படும். அதேவேளை, 350 சிசி திறன் கொண்ட புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு வரும் நவம்பர் 1 முதல் புக்கிங் திறக்க உள்ளோம்.
வரும் ஆண்டு பிப்ரவரி மாத மத்தியிலிருந்தோ அல்லது மார்ச் மாதம் முதல் டெலிவிரி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பழைய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை வாங்க விரும்பினால் புக்கிங்கை இதற்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறோம்.
குரூஸர் ரகம் தவிர புதிய கஃபே ரேஸர் என்ற குறைந்த தூர பயணங்களுக்கான புதிய ரக மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். ஆனால், அறிமுகத்துக்கு காலக் கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கவில்லை.
மேலும், டீசல் மோட்டார்சைக்கிளை வடிவமைப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. எதிர்காலத்திலும் டீசல் மோட்டார்சைக்கிளை தயாரிப்பு என்ற பேச்சுக்கும் தற்போது இடம் இல்லை," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








