புதிய 125சிசி வெஸ்பா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பியாஜியோ
வெஸ்பா எல்எக்ஸ்125 சொகுசு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய பியாஜியோ நிறுவனம், அடுத்து ஒரு புதிய 125சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. ப்ளை என்ற பெயரில் வரும் இந்த புதிய ஸ்கூட்டர் விலை குறைவாக இருக்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் புதிய வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. பிரிமியம் ரக ஸ்கூட்டராக நிலை நிறுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் விலையை கேட்ட வாடிக்கையாளர்களுக்கு மயக்கம் வர வைத்தது.

சென்னையில் 80,000 ஆன்ரோடு விலையில் வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அழகிய வடிவமைப்பால் வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டர் விற்பனை ஓரளவு நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில், மார்க்கெட்டில் முக்கிய இடம் பிடிக்கும் விதமாக பிற போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் புதிய 125 ஸ்கூட்டரை பியாஜியோ அறிமுகப்படுத்த உள்ளது. ப்ளை என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய வெஸ்பா ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்சஸெஸ் ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டி போடும்.
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 10 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷனையும் கொண்டிருக்கும்.
பின்புறம் டிரம் பொருத்தப்பட்டு வரும் இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் விரும்பினால் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கிடைக்கும். அடுத்த இரு மாதங்களில் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.50,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








