வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர்: சில சுவாரஸ்ய தகவல்கள்

பிரிமியம் பிராண்டாக வெஸ்பாவை மார்க்கெட்டில் நிலைநிறுத்தப் போவதாக பியாஜியோ கூறி வருகிறது. இந்த நிலையில், அப்படி என்ன விஷேசம் இருக்கிறது இந்த வெஸ்பாவில் என்று நெட்டில் கண்களை மேயவிட்டபோது கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
2ம் உலகப் போரின்போது இத்தாலிக்கு ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்த கரோடினா டி அஸ்கானியோதான் வெஸ்பா ஸ்கூட்டரை முதன்முதலில் வடிவமைத்து கொடுத்தார்.
உருவத்தில் குளவி(வாஸ்ப்) போன்று இருந்ததால் வெஸ்பா என்று பெயர் வைக்க காரணமாம். முதல் வெஸ்பா ஸ்கூட்டர் பப்பரினோ என்ற பெயரில்தான் விற்பனைக்கு வந்தது. வெஸ்பா பிராண்டில் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்து 66 ஆண்டுகள் ஆகிறது.
கடந்த 1951ல் வெஸ்பா ஸ்கூட்டரின் புரோட்டோ டைப் மாடல் மணிக்கு 171.102 கிமீ வேகத்தில் பறந்து உலக சாதனை படைத்தது.
கடந்த 1997ம் ஆண்டு சிலி நாட்டை சேர்ந்த ஜார்ஜியோ பெட்டினெல்லி என்பவர் அமெரிக்கா, சைபீரியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களை வெஸ்பா ஸ்கூட்டரில் சுற்றி வந்தார்.
அவர் 1,50,000 கிமீ தூரத்தை கடந்து வந்து தாஸ்மானியாவில் தனது சுற்றுப் பயணத்தை முடித்தார். இதுதவிர, அவர் மொத்தமாக வெஸ்பா ஸ்கூட்டரில் மட்டும் 2,54,000 கிமீ தூரம் சுற்றியுள்ளார்.
முதன்முதலாக, வெஸ்பா ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டபோது, ஓவியர் ஒருவர் ஒரு அறையில் போடப்பட்டிருந்த சோபாவில் ஆர அமர உட்கார்ந்து டிசைனை வரைந்து கொடுத்தார் என்பது சுவாரஸ்யம்.
பனியும், குளிரும் படிந்து கிடக்கும் அசாதாரணமான தட்ப வெப்ப நிலை கொண்ட துருவப் பகுதிகளில் கூட வெஸ்பா ஸ்கூட்டர் தங்கு தடையின்றி பயணம் சென்று வந்துள்ளது.
வெஸ்பா பிராண்டில் 150க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர் மாடல்கள் வலம் வருகின்றன. ரோமன் ஹாலிடே, டியர் டெய்ரி உள்ளிட்ட பிரபலமான ஹாலிவுட் படங்களில் கதையுடன் இயைந்த சூழ்நிலைகளில் வெஸ்பா வலம் வந்து ரசிகர்களை விசில் அடிக்க வைத்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த ஃபெராரி நிறுவனம் பார்முலா-1 கார் பந்தயத்தில் சாம்பியனாக வாகை சூடியதை கொண்டாடும் வகையில், லிமிடேட் எடிசன் வெஸ்பா ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது பியாஜியோ. மேலும், ஃபெராரி அணியின் வீரர்கள் சூ மேக்கர் உள்ளிட்டவர்களின் பெயர்களிலும், பெராரி கார்களின் அடர்ந்த சிவப்பு கலரிலும் ஸ்கூட்டரை கஸ்டமைஸ் செய்தும் கொடுத்தது பியோஜியோ.
உலகெங்கிலும் 30 நாடுகளில் வெஸ்பா ஸ்கூட்டருக்கு 150க்கும் மேற்பட்ட கிளப்புகள் இருக்கின்றன. உலகில் 2 அருங்காட்சியங்களில் வெஸ்பா ஸ்கூட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மியூசியம் மற்றொன்று பியாஜியோவின் சொந்த மியூசியம்.
(அதிக அப்டேட்களுக்கு டிரைவ்ஸ்பார்க் ஃபேஸ்புக் பக்கத்தில் பின்தொடருங்கள்)


Click it and Unblock the Notifications








