பெங்களூரில் பைக் ஆலை அமைக்க டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் முடிவு

இங்கிலாந்தை சேர்ந்த பழம்பெருமை வாயந்த பைக் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் பைக் விற்பனையை துவங்க உள்ளது.
கடந்த ஜனவரியில் டெல்லி கண்காட்சியில் தனது தயாரிப்புகளை முதன் முறையாக இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், இறக்குமதி செய்து விற்பனை செய்தால் விலை இருமடங்காகிறது என்பதால், இந்திய பைக் மார்க்கெட்டில் போட்டி போட முடியாது என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
எனவே, இந்தியாவிலேயே ஆலை அமைத்து பைக்குகளை அசெம்பிளிங் செய்து விற்பனை செய்ய உள்ளது டிரையம்ப். இதற்காக, பெங்களூரில் புதிய ஆலை கட்டுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தமிழ்நாடு மற்றும் மஹாரஷ்டிராவில் ஆலை அமைப்பது குறித்து மாநில அரசுகளுடன் டிரையம்ப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில், பெங்களூர் அருகிலுள்ள நரசப்பூர் தொழிற்பேட்டையில் தனது ஆலையை கட்டுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரையம்ப் நிறுவனத்துக்காக நரசப்பூர் தொழிற்பேட்டையில் 40 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு வழங்குவதாக தெரிவி்ததுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதே பகுதியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் ஆலையை கட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








