டீசல் மோட்டார்சைக்கிளை தயாரிக்க நிறுவனங்கள் மும்முரம்

டிவிஎஸ் மோட்டார்ஸ்
டீசலில் இயங்கும் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க நாட்டின் முன்னணி இருசக்கர வாகனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.

பெட்ரோல் விலை விண்ணை முட்டி வருகிறது. இதனால், கார் மார்க்கெட்டில் டீசல் மாடல்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. இதேபோன்று, மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டிலும் ஒரு புது டிரென்ட் உருவாகி வருகிறது.

பெட்ரோல் தவிர மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதற்கு அனைத்து முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா, டிவிஎஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களும் மோட்டார்சைக்கிளுக்கான டீசல் எஞ்சினை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் பி.எஸ்.அசோக் கூறுகையில்,"'டீசல் தொழில்நுட்பத்தில் எங்களது நிறுவனம் சிறந்த பின்புலத்தை கொண்டிருக்கிறது. எனவே, இருசக்கர வாகனங்களுக்கான டீசல் எஞ்சின் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்," என்றார்.

மேலும், குரூஸர் மற்றும் சக்திவாய்ந்த பைக்குகளில் டீசல் எஞ்சின்களை பொருத்தவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. மேலும், பைக் மற்றும் கார் டீசல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ரூ.500 கோடி வரை முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இருசக்கர வாகன ஆராய்ச்சிக்காக மஹிந்திரா நிறுவனம் புனே நகரில் சமீபத்தில் பிரம்மாண்ட ஆராய்ச்சி மையத்தை திறந்தது நினைவிருக்கலாம். இதேபோன்று, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் டீசல் தொழில்நுட்பத்தில் பைக் எஞ்சின் தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆனால், மோட்டார்சைக்கிள் டீசல் எஞ்சின் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிறுவனம் சிஎன்ஜியில் இயங்கும் பைக்கை உருவாக்கி வருகிறது. இந்த பைக்கை விரைவில் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும், க்யூப் என்ற ஸ்கூட்டரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்திருந்தது.

பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இந்த ஹைபிரிட் ஸ்கூட்டர் வரும் செப்டம்பரில் சோதனை செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு விற்பனைக்கு இந்த ஸ்கூட்டர் வணிக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. சாதாரண ஸ்கூட்டர்களை விட இந்த ஸ்கூட்டர் 35 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும். அதேவேளை, விலையும் அதிகமாக இருக்கும்.

இதுதவிர, அதிக மைலேஜ் தரும் வகையிலான இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் பைக்குகளை தயாரிப்பதிலும் இருசக்கர வாகன நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களைவிட இவை 30 முதல் 35 சதவீதம் அதிக மைலேஜ் தரும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1990ம் ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் டீசல் புல்லட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக டீசல் புல்லட் உற்பத்தியை நிறுத்தியது.

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் மீண்டும் டீசல் புல்லட் உற்பத்தியை ராயல் என்பீல்டு துவங்குமா என்று அவ்வப்போது அரசல்புரசலான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரி வி.ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரிபாக சப்ளை நிறுவனம்தான் மோட்டார்சைக்கிள்களுக்கான டீசல் எஞ்சின்களை தயாரித்து வழங்கியது.

ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் இருந்த பல்வேறு தொழில்நுட்ப பின்னடைவுகளால் டீசல் எஞ்சின் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். எனவே, அனைத்து இருசக்கர வாகன நிறுவனங்களும் தற்போது சொந்த முயற்சியில் மோட்டார்சைக்கிள்களுக்கான டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தை தயாரித்து வருகின்றனர்," என்றார்.

நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் புதிய ஹைபிரிட் ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைத்திருந்தது. லீப் என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்கூட்டரை உற்பத்தி நிலைக்கு மேம்படுத்தும் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மேலும், டீசல் எஞ்சின் தயாரிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கார் நிறுவனங்கள் போன்றே இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தற்போது டீசல் எஞ்சின் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. எனவே, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டீசல் மோட்டார்சைக்கிள்கள் மார்க்கெட்டில் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 18, 2012, 10:10 [IST]
English summary
Country's leading two wheeler makers is trying to develop diesel engine for two wheelers due to skyrocketing petrol prices. Major companies such as Mahindra & Mahindra, TVS Motors, Hero MotoCorp and Bajaj Auto are conducting extensive research in this regard.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+