நம்பர்- 1 ஆவது ஜோக் அல்ல: ஹோண்டாவுக்கு ஹீரோ பதிலடி!

இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட்டின் தற்போதைய நிலவரத்தை வைத்து பார்க்கும்போது, 2020ல் என்று இல்லை, கூடிய விரைவில் அதாவது 2015 அல்லது 2016ம் ஆண்டிலேயே முதலிடத்தை பிடித்துவிடுவோம் என்று நம்புகிறேன்," என்று ஹோண்டாவின் உயரதிகாரி ஷின்ஜி அயோமா சமீபத்தில் கூறியிருந்தார்.
இதற்குத்தான் நாட்டின் நம்பர்-1 இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் இதுபற்றி பவன் முஞ்சால் கூறுகையில்," ஹோண்டா பிரிந்த பின் எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை விரிவாக்கம் செய்ததோடு, செயல்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறோம்.
ஹரியானாவின் குர்கான் மற்றும் தாருஹேரா ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் 400க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இருக்கின்றனர். அதில், பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். அவர்களின் புதிய புதிய முயற்சிகள் மற்றும் புதுமையான எண்ணங்கள் எதிர்காலத்தில் எங்களது வர்த்தகத்தை புதிய இடத்திற்கு கொண்டு செல்லும்.
எங்களிடம் இருந்து நம்பர்- 1 இடத்தை யாரும் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புக்கு இடம் இல்லை. தொடர்ந்து நம்பர்-1 இடத்தை தக்க வைப்போம்," என்று அவர் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவிலிருந்து ஹோண்டா பிரிந்ததையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து புதிய தயாரிப்புகளை வெளியிட உள்ளது. இதன்மூலம், தனது மார்க்கெட்டை தக்கை வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஆனால், இந்திய மார்க்கெட்டில் நான்காவது இடத்தில் இருந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த ஓர் ஆண்டில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தற்போது 2ம் இடத்துக்கு முன்னேறிவிட்டது. இந்த நிலையில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்துவிடுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








