அடுத்த ஆண்டு 250சிசி பைக்கை களமிறக்க ஹார்லி டேவிட்சன் திட்டம்
இத்தாலியில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் 2 புதிய குறைந்த விலை பைக் மாடல்களை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்தது. இதுகுறித்து நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த புதிய பைக்குகள் ரூ.4 லட்சம் விலை பட்டியலில் வருவதால், இந்திய பைக் பிரியர்களின் ஆவலை வெகுவாக கிளறியுள்ளன.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்ற வகையில் 250சிசி மற்றும் 300சிசி பிரிவில் புதிய பைக்குகளை தயாரிக்க ஹார்லி டேவிட்சன் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இருசக்கர வாகன மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட் இன் இந்தியா
சிறிய எஞ்சின் கொண்ட இந்த பைக்குகளுக்கும் பெரும்பான்மையான பாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்த திட்டத்தில் தொடர்புடைய பெயர் வெளியிட விரும்பாத இரு ஹார்லி டேவிட்சன் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளோபல் மாடல்
இதுகுறித்து ஹார்லி டேவிட்சன் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் அனூப் பிரகாஷ் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், குறிப்பிட்ட மார்க்கெட்டுக்காக பைக்குகளை ஹார்லி தயாரிப்பதில்லை என்றும், அனைத்து மாடல்களும் சர்வதேச அளவில் செல்லத்தக்கதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மாடல்களை பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

போட்டி
உலகிலேயே சீனாவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய இருசக்கர வாகன சந்தையான இந்தியாவில் பல பிரிமியம் பைக் தயாரிப்பாளர்கள் 250சிசி மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஹயோசங், டிரையம்ஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றன. இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் 250சிசி பைக்கை களமிறக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் போட்டியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு பாகங்கள்
இந்தியாவில் வடிவமைக்கப்படும் இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான ஹெட்லைட்டுகள், டயர், கவுல்கள், ஷாக் அப்சார்பர்கள் மற்றும் இதர பல முக்கிய பாகங்களை இந்திய சப்ளையர்களிடமிருந்து பெற ஹார்லி திட்டமிட்டுள்ளது. இதனால், சவாலான விலையில் இந்த புதிய பைக்குகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை
ஹார்லியின் புதிய பைக்குகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சத்திற்கு இடையிலான பட்டியலில் நிலைநிறுத்தப்படும். இதன்மூலம், ராயல் என்பீல்டு, ஹாய்சங் உள்ளிட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

அறிமுகம்?
அடுத்த ஆண்டு இந்த புதிய பைக்குகளை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








