'பல்க்' ஊதிய உயர்வை வழங்க ஹீரோ தொழிலாளர்கள் வலியுறுத்தல்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கு ஹரியானா மாநிலம், குர்கானில் ஆலை உள்ளது.
இந்த ஆலையில், 1,200 நிர்ந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த மூன்றாண்டுகளுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஹீரோ மோட்டோ கார்ப் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நிர்வாகம் சார்பில் ரூ.6,500 ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ரூ.18,000 ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு நிர்வாகம் தரப்பில் எந்தவொரு உறுதியும் அளிக்கப்படவில்லை.
இதனால், அதிருப்தியில் இருக்கும் தொழிலாளர்கள் தற்போது பல்வேறு புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் நேர பணிகளை புறக்கணித்துள்ளனர். இதனால், வழக்கமான உற்பத்தி இலக்கு குறையும் நிலை உள்ளது.
மேலும், நிர்வாகத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிகின்றனர். நிர்வாகம் சார்பில் தரப்படும் காபி மற்று உணவுப் பொருட்களையும் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கவல்ப்ரீத் சிங் கூறுகையில்,"நிர்வாகத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சில புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை," என்றார்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் உள்ள மாருதி கார் ஆலையில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதோடு, பெரும் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு ரூ.18,500 வரை ஊதிய உயர்வை மாருதி அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








