பெங்களூர் அருகே ஹோண்டாவின் புதிய இருசக்கர வாகன ஆலை திறப்பு
பெங்களூர் அருகே, நரசப்பூர் தொழிற்பேட்டை பகுதியில் புதிய இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை ஹோண்டா திறந்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்படுகிறது.
ஹீரோஹோண்டாவிலிருந்து பிரிந்த பின்னர் இந்தியாவில் தனது வர்த்தக செயல்பாடுகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். மேலும், அதிகரித்து வரும் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் பெங்களூர் அருகே புதிய ஆலையை அமைத்துள்ளது.

இந்த ஆலையின் திறப்பு விழா நேற்று நடந்தது. 96 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 12 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்ய முடியும். மேலும், இரண்டாம் கட்டமாக இந்த ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 6 லட்சம் என்ற அளவில் கூட்டிக் கொள்ள முடியும்.
ரூ.1,350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆலை மூலம் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த ஆலையில் ட்ரீம் யுகா பைக் தயாரிப்பு துவங்கப்பட இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஹோண்டாவின் மூன்றாவது இருசக்கர வாகன ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆலையின் மூலம் ஹோண்டாவின் பைக் மாடல்களின் காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








