டெல்லி ஆட்டோ எக்ஸ்போ: ஹயோசங் திட்டம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 2 புதிய பைக் மாடல்களை பார்வைக்கு வைக்க ஹயோசங் திட்டமிட்டுள்ளது.
புனேயில், ஸ்பெஷல் எடிசன் ஹயோசங் ஜிடி250ஆர் எல்இ பைக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அறிந்ததே. அந்த நிகழ்ச்சியில் ஹயோசங் பிராண்டு பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வரும் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் தலைவர் சிரிஷ் குல்கர்னி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் வினவினர். அதற்கு பதிலளித்த அவர், ஜிவி250 மற்றும் எக்ஸ்5 பைக்குகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஜிவி250 பைக்கில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதால் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று, எக்ஸ்5 பைக்கும் உடனடியாக அறிமுகம் செய்யப்படாது என்று அவர் கூறினார்.
ஹயோசங் எலக்ட்ரிக் பைக்குகளை தருவிக்கும் வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எலக்ட்ரிக் பைக்குகளுக்கான மார்க்கெட் இந்தியாவில் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும், அதை தவிர்த்து ஹைபிரிட் பைக்குகளை அறிமுகம் செய்தால் புத்திசாலித்தனமாக இருக்கும் என்று கூறினார்.
நடப்பு ஆண்டில் மட்டும் 1,250 ஜிடி 250 பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்த அவர், ஜிடி 250ஆர் மற்றும் ஜிவி250 ஆகிய பைக்குகள் தங்களுக்கு போட்டியாளர்களிடம் இருந்து தனித்த அடையாளத்தை தந்திருக்கும் மாடல்களாக குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications








