டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் வருகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நவம்பரில் இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த புகழ்வாய்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான டிரையம்ஃப் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் பிரிமியம் மோட்டார்சைக்கிள் மாடல்கள் நம் நாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வருவதோடு, பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. மானேசரில் திறக்கப்பட இருக்கும் புதிய ஆலையில் மோட்டார்சைக்கிள்களை அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

எச்சரிக்கை உணர்வு
இந்திய மார்க்கெட்டில் பிரிமியம் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் களமிறங்குகிறது. டுகாட்டி, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ளும் விதமாக இறக்குமதி செய்வதை தவிர்த்து இந்தியாவில் அசெம்பிள் செய்ய தீர்மானித்ததே தாமதத்திற்கு காரணம். எனவே, டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்களின் விலை பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.
படத்தில் போனிவிலி மோட்டார்சைக்கிள்

டீலர் எண்ணிக்கை
முதலில் பெருநகரங்களில் மட்டுமே டீலர்களை திறந்து மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய உள்ளது. படிப்படியாக டீலர் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
படத்தில் ஸ்பீடு டிரிப்பிள் மோட்டார்சைக்கிள்

அசெம்பிளிங் மாடல்கள்
ஹார்லி டேவிட்சன் ஃபார்முலாவை பின்பற்றி அந்த நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட பிரபல மாடல்களான போனிவிலி, ஸ்ட்ரீட் டிரிப்பிள் மற்றும் டேடோனா 675 ஆகிய மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய உள்ளது. தண்டர்பேர்டு ஸ்ட்ராம், ராக்கெட் 3 ஆகிய விலையுயர்ந்த உயர்ரக மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
படத்தில் டேடோனா 675

பெங்களூரில் ஆலை
பெங்களூர் அருகே நரசப்புராவில் புதிய ஆலையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், முதலில் மானேசரில் சிறிய ஆலையில் மோட்டார்சைக்கிள்கள் அசெம்பிள் செய்யப்படும்.
படத்தில் டைகர் 800 எக்ஸ்சி

முக்கிய மார்க்கெட்
நடப்பு ஆண்டு டிரையம்ஃப் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஆண்டு. குறிப்பாக, இந்திய மார்க்கெட்டில் மிகுந்த நம்பிக்கையுடன் காலடி பதிக்கிறோம். கடந்த சில மாதங்களாக இந்திய மார்க்கெட்டின் வர்த்தக நிலவரங்களை தீவிரமாக ஆராய்ந்து கொள்கைகளை வகுத்து வருகிறோம். இந்திய வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தையும், மன நிறைவான சேவையையும் வழங்குவோம்," என்று டிரையம்ஃப் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் பால் ஸ்ட்ரவுடு கூறியுள்ளார்.
படத்தில் தண்டர்பேர்டு ஸ்ட்ராம்

புதிய அனுபவம்
உலக அளவில் சிறந்த மோட்டார்சைக்கிள் பிராண்டான டிரையம்ஃப் நிறுவனத்தில் இணைந்தது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மார்க்கெட்டுக்கு தகுந்த மிகச் சிறப்பான கொள்கைகள் டிரையம்ஃப் வசம் உள்ளது. டிசைன், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து விதத்திலும் டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வாடிக்கையாளர்களை புதிய சுவையை வழங்கும்," என்று டிரையம்ஃப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் விமல் சம்ளி கூறியுள்ளார்.
படத்தில் ராக்கெட் 3 ரோட்ஸ்டெர்


Click it and Unblock the Notifications








