ஹீரோ, ஹோண்டா இருசக்கர வாகனங்களின் விலை உயர்ந்தது!
உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து, இருசக்கர வாகனங்களின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை தவிர்த்து பிற மாடல்களின் விலை 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல்களின் விலை ரூ.250 முதல் ரூ.550 வரை அதிகரித்துள்ளது.

உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் விலையை உயர்த்தியுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனமும் தனது இருசக்கர வாகனங்களின் விலையை அதிகரித்துள்ளது.

ஆக்டிவா, டியோ, ஏவியேட்டர் உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களின் விலை ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், பைக் மாடல்களின் விலை ரூ.450 வரையிலும் ஹோண்டா நிறுவனம் அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கான காரணத்தை ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லையெனினும், உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதன் காரணமாகவே விலை உயர்த்தப்பட்டிருப்பதாக, அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, நாட்டின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதுவரை விலையை உயர்த்தவில்லை. தற்போதைக்கு விலை உயர்வு திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








