மணிக்கு 340 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமையுடன் புதிய மோட்டார்சைக்கிள்!
மணிக்கு 340 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்ட தயாரிப்பு நிலை மோட்டார்சைக்கிளை உருவாக்குவது சாத்தியமா? என்ற கேள்விக்கு விடை காண முயன்றிருக்கிறார் முன்னாள் பைக் ரேஸரும், பொறியாளருமான வின்சென்ட் மெஸ்ஸினா.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் தற்போது தாய்லாந்தில் வசித்து வருகிறார். தற்போது இவர் உலகின் அதிசக்திவாய்ந்த அல்ட்ரா பைக் மாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த பைக்கை பிரபல டிசைனர் டிம் கேமரூன் உதவியுடன் வின்சென்ட் வடிவமைத்துள்ளார். அரோரா என்ற பிராண்டில் வரும் இந்த புதிய 'அல்ட்ரா' மோட்டார்சைக்கிள்களின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பெயர்
அரோரா ஹெல்ஃபயர் OZ26 என்ற பெயரில் இந்த புதிய அல்ட்ரா பைக் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பைக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரித்து விற்பனை செய்ய வின்சென்ட் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, இந்த பைக் தயாரிப்பு திட்டத்திற்கு முதலீடுகளையும் வரவேற்பதாக தெரிவித்திருக்கிரார்.

வடிவமைப்பு அம்சங்கள்
ஃப்ரேம் இல்லாமல், கார்பன் ஃபைபர் மற்றும் விமானங்களில் பயன்படுத்தப்படும் உறுதிமிக்க பில்லெட் அலுமினிய பாகங்களை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இது ஓட்டுவதற்கு எளிதாகவும், வளைந்து நெளிந்து செல்வதற்கு சிறப்பான கையாளுமையை வழங்கும்.

எஞ்சின்
இந்த பைக்கில் 2.6 லிட்டர் க்வாட் -கேம் வி8 சிலிண்டர் அமைப்பு கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 417 எச்பி பவரையும், 319 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. ஸ்லிப்பர் க்ளட்ச்சுடன் கூடிய 5 ஸ்பீடு கான்ஸ்டென்ட் மெஷ் கியர்பாக்ஸ் உள்ளது.

செயல்திறன்
265 கிலோ எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 340 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது. பல ஸ்போர்ட்ஸ் கார்களைவிட ஆற்றலிலும், வேகத்திலும் முன்னிலையானது. உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக குறிப்பிடலாம்.

டிரைவிங் மோடுகள்
ஈரப்பதம் மிக்க சாலைகளுக்கான வெட் மோடு, நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற சிட்டி மோடு, நீண்ட தூர பயணங்களுக்கான டூரிங் மோடு மற்றும் செயல்திறனை அதிகபட்சம் வெளிக்கொணரும் ஸ்போர்ட் மோடு என பல விதமான டிரைவிங் மோடுகளில் வைத்து ஓட்ட முடியும்.

இசியூ., மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
மோடெக்- எம்1 சீரிஸ் எஞ்சின் கன்ட்ரோல் இசியூ பொருத்தப்பட்டு இருக்கிறது. மோடெக்- சி127 திரையுடன் கூடிய தகவல் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஷோரய் எல்எஃப்எக்ஸ் லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிரேக் சிஸ்டம்
பிரெம்போ ஜிபி4 ஆர்எக்ஸ் ரேடியல் காலிபர்கள் மற்றும் மாஸ்டர் சிலிண்டர்கள் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளது. இல்லையெனில், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

லிமிடேட் எடிசன்
தாய்லாந்திலுள்ள ஆலையில், குறைந்த எண்ணிக்கையில் இந்த பைக்கை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








