400சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்: டுகாட்டியின் விலை குறைவான மாடல்
உலகின் மிக அழகான பைக் மாடல்களில் ஒன்றாக டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வர்ணிக்கப்படுகிறது. பழமையான தோற்றம், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவிலும் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், 400சிசி எஞ்சின் கொண்ட குறைவான விலை டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடல் இந்தியாவிலும் நிச்சயம் வரும் என்பதால், முன்கூட்டியே சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

அறிமுகம்
அடுத்த மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ ஆட்டோ ஷோவில், இந்த புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்
தற்போது விற்பனையில் உள்ள டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 800 மாடலின் டிசைன் தாத்பரியங்கள் மற்றும் ஃப்ரேமின் அடிப்படையிலேயே இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடை குறைவாக இருக்கும்.

எஞ்சின்
தற்போது விற்பனையில் இருக்கும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடலில் 75 பிஎச்பி பவரை அளிக்க வல்ல இரட்டை சிலிண்டர் கொண்ட 803சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினின் அடிப்படையில்தான் புதிய 400சிசி எஞ்சினை உருவாக்கியுள்ளனர்.

எஞ்சின் விபரம்
புதிய 400சிசி டுகாட்டி ஸ்க்ராம்ப்ளரில் ஒற்றை சிலிண்டர் எஞ்சின் இருக்கும் என்று முதலில் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போதைய தகவலின்படி, 400சிசி டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிலும் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுடன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.6.77 லட்சம் விலையில் 803சிசி எஞ்சின் கொண்ட டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய 400சிசி டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.4.5 லட்சம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்பு
இந்தியா போன்ற நாடுகளில் இந்த புதிய 400சிசி டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு மிகச்சிறப்பான வரவேற்பு கிடைக்கும். அத்துடன், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த புதிய மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








