பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் விரைவில் விற்பனைக்கு வருகிறது
பல்சர் வரிசையில் அடுத்ததாக சிஎஸ்400 பைக்கை களமிறக்குவதை சூசகமாக தெரிவித்துள்ளது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.
சமீபத்தில் நடந்த பஜாஜ் வி15 பைக் அறிமுக விழாவின்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பஜாஜ் ஆட்டோ அதிகாரி, அடுத்து பல்சர் வரிசையில் அதிக சிசி திறன் கொண்ட புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். இந்த பைக் நிச்சயமாக சிஎஸ்400தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான்செப்ட்
கடந்த 2014ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பல்சர் பைக்கின் கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பஜாஜ் ஆட்டோ ஏமாற்றம் தந்தது.

சூசகம்
இந்த சூழலில் தற்போது சிஎஸ்400 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ முடிவு செய்திருக்கிறது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திடம் உள்ளது.

ரகம்
பல்சர் சிஎஸ்400 என்று குறிப்பிடப்படும் இந்த பைக் க்ரூஸர் ஸ்போர்ட் ரகத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதாவது, அதி செயல்திறன் மிக்க க்ரூஸர் மாடலாக வருகிறது.

எஞ்சின்
கேடிஎம் டியூக் 390 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 373.4சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 40 பிஎச்பி பவரை அளிக்கும் ஆற்றல் வாய்ந்தாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்
பஜாஜ் சிஎஸ் 400 பைக்கில் முன்புறம், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் கொண்ட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதர அம்சங்கள்
பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன், முழுவதும் டிஜிட்டல் மீட்டர் கன்சோல், பெட்ரோல் டேங்க்கில் எல்சிடி திரை, அலாய் வீல்கள், எல்இடி விளக்குகள் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.1.99 லட்சம் விலையில் கேடிஎம் ட்யூக் 390 பைக் விற்பனை செய்யப்படுகிறது. இதனைவிட ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைவான விலையில் இந்த புதிய பஜாஜ் சிஎஸ்400 பைக்கை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








