பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் இந்தியாவில் அறிமுகமாவதில் தாமதம்... காரணம் என்ன?...
இந்தியாவில் சொகுசு கார்களுக்கு மட்டுமே பேர் போன நிறுவனமாக இருந்த பிஎம்டபிள்யூ, அதன் சூப்பர் பைக்குகளை இங்கு களமிறக்கியபோது அதற்கும் ஏகப்பட்ட லைக்குகள் கிடைத்தன.
அதுவும் தல அஜித், புணேவிலிருந்து சென்னைக்கு பிஎம்டபிள்யூ பைக்கில் வந்து தெறிக்க விட்ட பிறகு அந்த மாடல் வண்டியின் மவுசு மேலும் எகிறிப் போனது. இந்த நிலையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் பைக், இப்போ வரும்.... அப்போ வரும் என போங்கு காட்டிக் கொண்டிருந்த வேளையில், இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் அந்த பைக் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டது.

அதற்காக ஆவலோடு பலர் காத்திருந்த நிலையில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் பைக் அடுத்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிஎம்டபிள்யூ நிறுவனமே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இது, பைக் ஆர்வலர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்குகளை வாங்க அதிகப்படியானோர் ஆர்வம் காட்டுகின்றனர். புக்கிங்கை மட்டும் ஆரம்பித்து விட்டு, அதன் பிறகு டெலிவரி கொடுக்க கால தாமதம் செய்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்திக்கு உள்ளாவர்கள் என்று கருதியே இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் பைக்கைக் கொண்டு வருவதை அந்நிறுவனம் ஒத்திவைத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இந்திய சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யும் திறனை அதிகரித்த பிறகே ஜி 310 மாடலை அறிமுகப்படுத்தப் போவதாகவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் பைக் தயாரிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளில் அந்த மாடலை அறிமுகப்படுத்தும்போது, அதன் விலையை கேடிஎம் டியூக் 390 பைக்கை விடக் குறைவாக நிர்ணயிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்தியாவில் அது போலவே விலை நிர்ணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இங்கு கேடிஎம் டியூக் 390 மாடலை விட குறைவான விலையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் அறிமுகப்படுத்தப்பட்டால், அதன் விற்பனை எதி்ர்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே, பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் அம்சங்களைக் கொண்ட டிவிஸ் அகுலா பைக் விரைவில் இந்திய மார்க்கெட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








