இன்னும் சில மாதங்களில் 1,000சிசி புல்லட் மோட்டார்சைக்கிள்... கார்பெர்ரி ஆயத்தம்!
புல்லட் மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி. 1,000சிசி புல்லட் மோட்டார்சைக்கிள் மாடல்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்பெர்ரி நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.
மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது உற்பத்திப் பிரிவையும் இந்தியாவுக்கு மாற்றியிருக்கிறது. இது புல்லட் மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு பெருமகிழ்ச்சியை தரும் விஷயமாக அமைந்துள்ளது. விலை, அறிமுக விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆஸ்திரேலிய நிறுவனம்
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரை சேர்ந்தவர் பால் கார்பெர்ரி. ஆட்டோமொபைல் எஞ்சினியரான இவர், கார்பெர்ரி என்ஃபீல்டு என்ற பெயரில் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தின் வாயிலாக 1,000சிசி எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை கார்பெர்ரி என்ஃபீல்டு என்ற சொந்த பிராண்டில் விற்பனை செய்து வந்தார்.

வெற்றி கிட்டவில்லை
கார்பெர்ரி என்ஃபீல்டு நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 13 கார்பெர்ரி என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளார். ஆனால், வர்த்தகம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், தனது உற்பத்தி பிரிவை இந்தியாவுக்கு மாற்றியிருக்கிறார்.

இந்திய தொழிலதிபர் உதவி
இந்தியாவை சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங் பாட்டியா என்ற தொழிலதிபரின் நிதி உதவியுடன் பிலாய் நகரில் தனது புதிய வாகன உற்பத்தி மையத்தை அமைத்திருக்கிறார். மேலும், இந்தியாவில் உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி செலவீனம் ஆஸ்திரேலியாவைவிட குறைவு என்பதும் கூடுதல் சாதகங்களாக குறிப்பிடுகிறார்.

எஞ்சினில் மாற்றம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 500சிசி ஒற்றை சிலிண்டர் கொண்ட எஞ்சினில் மாற்றங்களை செய்து, வி-ட்வின் என்ற V வடிவிலான இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 1,000சிசி எஞ்சினை பால் கார்பெர்ரி தனது நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். மேலும், அந்த வி சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினை பொருத்தும் வகையில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஃப்ரேமிலும் சில மாற்றங்களை செய்து 1,000 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை உருவாக்குகிறார்.

பவர்ஃபுல் எஞ்சின்
தற்போது ராயல் எனஃபீல்டு நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக 29.1 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. ஆனால், கார்பெர்ரி என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் 1,000சிசி வி-ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 50 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

சொந்த பிராண்டு
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை தனது கார்பெர்ரி என்ஃபீல்டு என்ற சொந்த நிறுவனத்தின் பிராண்டில் விற்பனை செய்ய இருக்கிறார். ஆனால், தோற்றத்தில் அதிக மாறுதல்கள் இருக்காது என்பதால், ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் நிச்சயம் பெரிய வரவேற்பு தருவார்கள் என்று நம்புகிறார்.

அரசு அங்கீகாரம்
கார்பெர்ரி என்ஃபீல்டு 1000சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு அரசு அங்கீகாரம் பெறும் முயற்சிகளை தற்போது பால் கார்பெர்ரி மற்றும் பாட்டியா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், உதிரிபாகங்களை வழங்குவதற்கான சப்ளையர்களை நியமிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

உற்பத்தி செலவு குறைவு
இந்தியாவில் உற்பத்தி செலவும், உதிரிபாகங்கள் விலையும் குறைவாக இருக்கும் என்பது மிகப்பெரிய சாதகம். அதேசமயத்தில், சரியான சப்ளையர்களை நியமிப்பது சவாலாக இருக்கிறது என்று கூறினார்.

விற்பனை எப்போது?
அடுத்த 6 முதல் 8 மாதங்களில் கார்பெர்ரி என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று பாட்டியா தெரிவித்தார்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான விலையில் புதிய கார்பெர்ரி என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை
கடந்த 2011ம் ஆண்டில் 1,000சிசி மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை ராயல் என்ஃபீல்டு மேற்கொண்டது. அப்போதே, பால் கார்பெர்ரியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 500சிசி எஞ்சினுக்கு மேலான ரகத்திற்கு செல்ல வேண்டாம் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவெடுத்ததால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

வரவேற்பு
இந்த தகவலை பால் கார்ப்பெரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில் ஏராளமான இந்தியர்கள் பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க சொல்லுங்க...
1,000சிசி புல்லட்டை வாங்க நீங்க ரெடியா? இந்த 1000சிசி புல்லட் குறித்த உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








