எக்ஸ்க்ளூசிவ்: முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய டிவிஎஸ் அகுலா!!
ஓசூர்- பெங்களூர் இடையில் ரகசியமாக சோதனை செய்யப்பட்ட டிவிஎஸ் அகுலா பைக்கை டிரைவ்ஸ்பார்க் வாசகர் ராகுல் ரவி படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பைக் எவ்வாறு இருக்கும் என்பதை ஓரளவு அனுமானிப்பதற்கு இந்த படம், வாசகர்களுக்கும், ஆட்டோமொபைல் தள எடிட்டர்களுக்கும் உதவும் என நம்புகிறோம். தொடர்ந்து ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் காணலாம்.

ஆவல்...
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், இயற்கையாகவே தமிழர்களாகிய நமக்கு பிறரைவிட அதிக ஆவல் இருக்கிறது.

முதல் மாடல்
முழுவதுமாக ஃபேரிங் பேனல் பொருத்தப்பட்ட முதல் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் பைக் என்பதும் எமது ஆவலுக்கு கூடுதல் காரணம்.

பதிவு
ஓசூர்- பெங்களூர் இடையில் அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த பைக்கை எமது வாசகர் ராகுல் ரவி படம் பிடித்து அனுப்பியிருக்கிறார். அந்த பைக் கர்நாடக மாநிலத்தின் தற்காலிக பதிவு எண் கொண்டதாக இருந்தது.

டிசைன்
பார்த்தவுடனே இது பல்சர் ஆர்எஸ்200 பைக் என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இதன் டிசைன் தெரிகிறது. பின்னர் சுதாரித்துக் கொண்டு உன்னிப்பாக பார்த்தால் இது அகுலா என்பதை கண்டறிந்தோம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடலுக்கும், இந்த பைக்கிற்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

பிளாட்ஃபார்ம்
பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது பைக் மாடல் இது. மேலும், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

எஞ்சின்
பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் இருக்கும் அதே ஒற்றை சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட இருக்கிறது. அதாவது, லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட முதல் டிவிஎஸ் மோட்டார்ஸ் பைக் மாடலும் இதுதான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி
யமஹா ஆர்3, கவாஸாகி நின்ஜா 300, கேடிஎம் ஆர்சி390 பைக் மாடல்களுடன் போட்டி போடும். மேலும், விலையும் சவாலாக இருக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








