வீலுக்குள்ளேயே ஷாக் அப்சார்பர்... டுகாட்டியின் புதிய தொழில்நுட்பம்!
சர்வதேச அளவில் செம கெத்தான பைக் நிறுவனமாக இருப்பது டுகாட்டி. இத்தாலியைச் சேர்ந்த இந்நிறுவனம் தயாரிக்கும் பைக்களை வாங்குவது பெருமைக்குரிய செயலாகவே பார்க்கப்படுகிறது.

அந்த பைக்குளில் வலம் வர வேண்டும் என்பது பெரும்பாலான இளைஞர்களின் தீராத கனவும் கூட.
வித்தியாசமான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பங்கள் என உலகளாவிய மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில், தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது டுகாட்டி.
புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் இந்த நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. அப்படியாக, இந்த முறை புதிய தொழில்நுட்பத்திலான வீல்கள் மற்றும் டயர்களை டுகாட்டி நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த வீல்களின் வரைபடம் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீல்களுக்கு காப்புரிமை பெறுவதற்காக, அதாவது பேடன்ட் பெற அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டுகாட்டி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
வேறு எந்த நிறுவனத்தின் வீல்களிலும் இல்லாத சிறப்பம்சங்கள் என்னதான் டுகாட்டியின் கண்டுபிடிப்பில் உள்ளது எனக் கேட்கிறீர்களா?
இருக்கிறது. வீலுக்கு நடுவிலேயே ரப்பரால் ஆன ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பைக்கை ஓட்டும்போது ஏற்படும் அதிர்வுகள் பெருமளவு குறையும்.
மார்க்கெட்டில் தற்போதுள்ள மோட்டார் சைக்கிள் வடிவமைப்பாளர்கள், வாகனத்தின் அதிர்வுகளைக் குறைக்க எஞ்சினில் ரப்பராலான ஷாக் அப்சார்பர்களைப் பொருத்துகிறார்கள்.
ஆனால், டுகாட்டி நிறுவனம் இதற்கு விதிவிலக்கு. எதிலும் புதுமை, எங்கும் நவீன தொழில்நுட்பம் என செயல்படும் அந்த நிறுவனம், அதிர்வுகளைக் குறைக்க வீலுக்கு நடுவிலேயே ஷாக் அப்சார்பரைப் பொருத்தியுள்ளது. இதுதான் அதன் ஹைலைட்டான விஷயம்.
அதுசரி, இந்த வீலுடன் சாதாரணமான டயர்களைப் பொருத்த முடியுமா? என்ற கேள்வியும் கூடவே வரும். அதற்கென பிரத்யேக வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் கூடிய டயர்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றுதான் கூறப்படுகிறது.
அதனைத் தயாரிக்கும் பணிகளிலும், டுகாட்டி நிறுவனம் இறங்கும் எனத் தெரிகிறது.
இந்த வீலை வடிவமைத்தது டுகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான கிலாடியோ டோம்னிகலி ஆவார்.
மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் பல புதுமைகளைப் புகுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள டுகாட்டி நிறுவனத்தின் புதிய வீல் தொழில்நுட்பங்களை முழுமையாக அறிந்துகொள்ள இன்னும் சிறிது காலம் காத்திருப்போம்...


Click it and Unblock the Notifications














