ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பிரத்யேக படங்களின் தொகுப்பு!
நாட்டின் பழம் பெருமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, இன்று ஹிமாலயன் என்ற புத்தம் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. கரடு முரடான சாலைகளுக்கு ஏற்ற தகவமைப்புகளை கொண்டிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிளை காண ஆவலோடு, காத்திருப்பவர்களுக்காக, எமது நிருபர் குழு வழங்கியிருக்கும் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

இந்த பைக்கிற்கு ஹிமாலயன் என்று மிக மிக பொருத்தமாக பெயரிட்டிருக்கின்றனர். ஏனெனில், இமயமலை பைக் பயணம் செல்லும் கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கான மாடலாக இதனை உருவாக்கியுள்ளனர்.
மேலும், இமய மலையில் உள்ள கரடு முரடான சாலைகளில் வைத்து கடுமையான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். எனவே, இந்த பைக்கில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும், இமய மலை பயணம் செல்வோர்க்கு மிக மிக உதவிகரமாக இருக்கும்.
கடந்த 5 ஆண்டுகள் முயற்சியிலும், பெரும் முதலீட்டிலும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளை மிக எளிமையான டிசைனுடன், உறுதியானதாகவும் தயாரித்திருப்பதாக ராயல் என்ஃபீல்டு நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த பைக்கில் சாகச பயணங்களை மேற்கொள்வோர்க்கான கூடுதல் ஆக்சஸெரீகளையும் ராயல் என்ஃபீல்டு வழங்குகிறது. இமயமலை சீதோஷ்ண நிலை மற்றும் ஆஃப் ரோடு ரைடர்களுக்கு ஏதுவான தரமான கவச உடைகள், கூடுதல் பெட்ரோல் எடுத்துச் செல்வதற்கான ஜெர்ரி கேன், பின்புறம் எளிதாக வைத்து செல்வதற்கான தண்ணீர் புகாத பை போன்ற ஆக்சஸெரீகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பலரின் வாழ்வின் லட்சியமான இமய மலை சாகசப் பயணம அல்லது இதர ஆஃப்ரோடு பயணங்களை விரும்புவோர்க்கு மிகச் சரியான விலையில், சிறந்த தயாரிப்பாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் இருக்கும் என்று உறுதியாக கூறலாம். தற்போது உள்நாட்டு மார்க்கெட்டுக்கு மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என சித்தார்த் லால் கூறினார். அடுத்த மாதம் விலை அறிவிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications
















































