செல்போன் பட்டனைத் தட்டினால் சுஸுகி பைக்.... பேடிஎம்-இல் புதிய வசதி அறிமுகம்...!!
காய்கறி வாங்குவதில் இருந்து, கரண்ட் பில் கட்டும் வரை உக்கார்ந்த இடத்திலிருந்து ஆன்-லைன் மூலமாக அனைத்தையும் மேற்கொள்ளும் அதிவேகமான உலகத்தில் வசித்து வருகிறோம்.
வரிசையில் நின்று, கால் கடுக்க பொருள் வாங்கியதும், பணம் கட்டியதும் மலையேறி விட்டது. அமேஸான், ஃபிளிப் கார்ட், இ-பே என பல இணைய வழி வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் பேமெண்ட் கேட்வே எனப்படும் இணைய வழியில் பணம் செலுத்துவற்கான ஊடகமாக வந்த அப்ளிகேஷன் பேடிஎம். அதிரடி சலுகைகள், தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த இந்நிறுவனம், மெல்ல மெல்ல இணைய வழி வர்த்தகத்திலும் கால் பதிக்கத் தொடங்கியது.
அமேஜான், ஃபிளிப் கார்ட்டுக்கு சவால் கொடுக்கும் வகையில் சரவெடி சலுகைகளை அள்ளி வீசியது இந்த நிறுவனம். இதற்கு வாடிக்கையாளர்களும் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கவே, இணைய வழி வர்த்தகத்தை மேலும் தீவிரப்படுத்தியது பேடிஎம்.
இப்போது அதற்கு அடுத்த கட்டமாக ஆன்-லைன் வாயிலாக சுஸுகி இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக பேடிஎம் மற்றும் சுஸுகி இடையே வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சுஸுகி லெட்ஸ் 110, ஸ்விஸ் 125, ஏக்ஸஸ் 125 என சுஜுகியின் அனைத்து மாடல் ஸ்கூட்டர்களும், ஜிக்ஸர், ஜிக்ஸர் எஸ்எஃப், ஹையாட்டே உள்ளிட்ட பைக் மாடல்களும் பேடிஎம் அப்ளிகேஷனில் விற்பனைக்கு வந்துள்ளது.
அதேவேளையில், சுஸுகி நிறுவனத்தின் சூப்பர் பைக்குகள் இன்னும் பேடிஎம்-க்கு வரவில்லை. பேடிஎம் மூலமாக வாடிக்கையாளர் பைக்குகளை புக் செய்யும்போது, அவரது இருப்பிடத்துக்கு அருகே அமைந்துள்ள சுஸுகி ஷோ ரூமில் இருந்து டெலிவரி செய்யப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பேடிஎம் வாயிலாக 10,000 பைக்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரே டச்சில் உங்கள் வீட்டுக்கு முன்னால் புது பைக் வந்து நிற்கும் என்றால், யாருக்குத்தான் அது வரப் பிரசாதமாக இருக்காது. இதைத் தவிர நிதி உதவி மற்றும் மாதச் சுலபத் தவணை உள்ளிட்ட வசதிகளும் பேடிஎம்-இல் உள்ளன.


Click it and Unblock the Notifications








