பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் புதிய பைக் மாடல்கள்!

Written By:

புத்தாண்டு நெருங்கி வரும் இவ்வேளையில் பல புதிய பைக் மாடல்கள் அறிமுகத்துக்கு தயாராகி வருகின்றன. வாடிக்கையாளர்களும் அந்த பைக்குகளின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதிய பைக் வாங்க திட்டமிட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக, மார்க்கெட்டில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கும் புதிய பைக் மாடல்கள் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. கேடிஎம் ட்யூக்390

இரண்டாம் தலைமுறை கேடிஎம் ட்யூக்390 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவமைப்பில் பல புதிய மாற்றங்கள், புதிய ஃப்ரேம், சஸ்பென்ஷன், சக்திவாய்ந்த பிரேக் சிஸ்டம் போன்ற முக்கிய மாற்றங்களுடன் இளைஞர்களை கவர வருகை தர இருக்கிறது. புதிய கேடிஎம் ட்யூக்390 பைக்.

நவீன தொழில்நுட்பங்கள்

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் ரைடு பை ஒயர் தொழில்நுட்பத்தில் வருகிறது. அதாவது, ஆக்சிலரேட்டரையும், எஞ்சினையும் சாதாரண ஆக்சிலரேட்டர் கேபிள் இணைப்பு இல்லாமல், சென்சார்கள், சிபியூ யூனிட் மூலமாக எஞ்சின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இது. அடுத்து டிஎஃப்டி திரையுடன் கூடிய முழுமையான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிளவுபட்ட அமைப்புடைய எல்இடி ஹெட்லைட் போன்றவை மிக முக்கிய அம்சங்கள். தற்போது எஞ்சினுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சைலென்சர், பக்கவாட்டில் மாற்றப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை

புதிய கேடிஎம் பைக்கில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வருகிறது. ரூ.2.45 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 02. பிஎம்டபிள்யூ ஜி310ஆர்

புதிய கேடிஎம் ட்யூக்390 பைக்கிற்கு சரியான போட்டியை தரும் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பிஎம்டபிள்யூ என்ற பிராண்டுக்கான மகிமையும் இளைஞர்களின் பல்சை எகிற வைத்துள்ளது. டிவிஎஸ் கூட்டணியில் இந்த பைக்கை உற்பத்தி செய்ய இருக்கிறது பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம்.

எஞ்சின் திறன்

நேக்டு ஸ்டைல் ரகத்தில் வரும் இந்த பைக் மிக கச்சிதமான டிசைன் அமைப்பை பெற்றிருக்கிறது. ட்ரெல்லிஸ் ப்ரேம், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் உள்ளிட்ட பல சிறப்புகளை தாங்கி வருகிறது. இந்த பைக்கில் இருக்கும் 313சிசி எஞ்சின் அதிகபட்சமாக 33.6 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.ரூ.1.80 லட்சம் முதல் ரூ.2 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 03. பஜாஜ் டொமினார்

பல்சர் பிராண்டின் மூலமாக இளைய சமுதாயத்தினரின் பேராதரவை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்ததாக பஜாஜ் டொமினார் என்ற மிக சக்திவாய்ந்த புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும்.

டிசம்பரில் அறிமுகம்?

சமீபத்தில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்த மாதம் 15ந் தேதி இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரூ.1.6 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 04. டார்க் டி6எக்ஸ்

இந்தியாவின் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றிருக்கிறது. ஆம், முன்பதிவு குவிந்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

'மின்சார கண்ணா'!!

இந்த பைக்கில் 8 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பைக் போல மிக ஸ்டைலான தோற்றத்துடன், 200சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு நிகரான மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும். ரூ.1.25 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெலிவிரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

05. ஹீரோ எச்எக்ஸ்250

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எச்எக்ஸ்250 பைக்குடன் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் நுழைய இருக்கிறது. முழுவதும் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட இந்த பைக் மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் பல சிறப்பம்சங்களுடன் வருகிறது.

எதிர்பார்க்கும் விலை

இந்த பைக்கில் இருக்கும் ப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 249சிசி எஞ்சின் அதிகபட்சமாக 31 பிஎச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

06. பெனெல்லி லியோன்சினோ

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனத்தின் பிரிமியம் பைக் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கிடைத்த உற்சாகத்தில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் பெனெல்லி லியோன்சியோ. ஸ்க்ராம்ப்ளர் ரகத்தை இந்த புதிய பைக் மாடலை விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது பெனெல்லி- டிஎஸ்கே கூட்டணி.

எஞ்சின் விபரம்

புதிய பெனெல்லி லியோன்சியோ பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 499.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 46.9 பிஎச்பி பவரையும், 45 என்எம் டார்க் திறனையம் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் கூறுகின்றன. ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

07. டிவிஎஸ் அகுலா 310

பிஎம்டபிள்யூ- டிவிஎஸ் கூட்டணியில் தயாரான மாடல். இது பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் எஞ்சின், ஃப்ரேம் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை பங்கிட்டுக் கொள்ளும்.

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், மிச்செலின் டயர்கள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸடம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. ரூ.2 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
India is about to witness some of the best sports bike launches in 2017 and here are the seven of the worthy bike launches
Story first published: Friday, November 25, 2016, 17:04 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos