சிக்னலில் நின்றால் தானாகவே ஆஃப் ஆகும் யமஹா ஜானஸ் ஸ்கூட்டர்...!!
பழைய டிவிஸ் சேம்ப் மற்றும் கைனடிக் ஹோண்டா வாகனங்கள் பெரும்பாலானோரது பால்ய காலங்களில் பிரம்மிப்பை உருவாக்கியவை. அப்பா, அக்கா, அண்ணன் என வீட்டில் உள்ள அனைவருக்குமானது அந்த வண்டிகள்.
அந்தக் காலகட்டத்தைத் தாண்டி நாம் வளர, வளர, கூடவே ஆட்டோமொபைல் உலகமும் அசுர வேகத்தில் பரிணமித்து வந்துள்ளது. அதன் பிறகு எத்தனையோ வண்டிகள் நாள்தோறும் மார்க்கெட்டுக்கு அறிமுகாகிக் கொண்டே இருக்கின்றன. ஸ்கூட்டர் செக்மெண்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாடல்கள் தற்போது உள்ளன. அவற்றிலும் பல்வேறு புதுமைகளும், நவீன தொழில்நுட்பங்களும் அனுதினமும், நம்மை ஆக்கிரமித்து வருகின்றன.

அப்படியான ஒரு புது ஸ்கூட்டரைத்தான் அறிமுகப்படுத்தப் போகிறது யமஹா நிறுவனம். அதுவும் இங்கு அல்ல, வியட்நாமில்... ஜானஸ் எனப் பெயரிப்பட்டுள்ள அந்த 125 சிசி புளூ கோர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரானது, மூன்று வடிவங்களில் வரவுள்ளன.
இந்த மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்டார்ட் - ஸ்டாப் ஆப்ஷன்கள். அதாவது, ஜானஸ் ஸ்கூட்டர் சாலையில் போகும்போது சிக்னல்களிலோ, நெரிசலிலோ சில நிமிடங்கள் நிற்க வேண்டிய சூழல் எழுந்தால், அதன் எஞ்சின் தானாகவே ஆஃப் ஆகி விடுமாம்.
எரிபொருள் சிக்கனம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த டெக்னாலஜி வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட விநாடிகள் வரை, வண்டி ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் ஆஃப் ஆகும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்சார் தொழில்நுட்ப அடிப்படையில் இந்த சிஸ்டம் இயங்குவதாக யமஹா தெரிவித்துள்ளது.
இதைத் தவிர, 14 இன்ச் வீல்கள் மற்றும் இருக்கைக்கு கீழ் உடைமைகளை எடுத்துச் செல்வதற்காக 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜானஸ் ஸ்கூட்டரின் மொத்த எடை 97 கிலோவாகும். கடந்த ஆண்டு மட்டும் 28 லட்சம் வாகனங்களை விற்றுள்ளதாகக் கணக்கு காட்டியிருக்கிறது யமஹா. அதில் 10 லட்சத்துக்கும் மேல் ஸ்கூட்டர் மாடல்களாம். ஸ்கூட்டர்களுக்கு உள்ள வரவேற்பைக் கருத்தில்கொண்டே அவற்றில் புதுமைகளைப் புகுத்தி வருகிறது அந்நிறுவனம்.
ஜானஸ் ஸ்கூட்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 82,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய டெக்னாலஜியுடன் கூடிய ஸ்கூட்டர் மாடல்கள் விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... அப்படி அறிமுகமானால், நம்ம ஊர் டிராஃபிக்குக்கு அவை உகந்ததாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








