ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக 400சிசி க்ரூஸர் பைக்கை களமிறக்கும் பஜாஜ்!
ராயல் என்ஃபீல்டுக்கு நேரடி போட்டியாக, சக்திவாய்ந்த புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை எப்படியாவது உடைத்து பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை பார்த்து வருகிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து ஏற்கனவே டோமினார் 400 பைக் மாடலை களமிறக்கியது.

விற்பனையில் ஓரளவு நல்ல பங்களிப்பை கொடுத்து வந்தாலும், எதிர்பார்த்த அளவு ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை உடைக்கவில்லை. மேலும், ராயல் என்ஃபீல்டு மாடல்களையும், டோமினார் 400 பைக்கையும் வாடிக்கையாளர் நேரடி போட்டி மாடலாக கருதவில்லை.

இந்த நிலையில், அடுத்ததாக, 400சிசி க்ரூஸர் பைக்கை பஜாஜ் ஆட்டோ உருவாக்கி வருவதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் மோட்டார்சைக்கிளில் 400சிசி எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ ஆயத்தமாகி வருவதாக அந்த செய்தியில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய 400சிசி பஜாஜ் அவென்ஜர் பைக் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

டோமினார் 400 மாடலில் பயன்படுத்தப்படும் அதே 373சிசி எஞ்சின்தான் புதிய பஜாஜ் அவென்ஜர் 400 மோட்டார்சைக்கிளிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 35பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த நிலையில், க்ரூஸர் மாடலில் சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

ஏற்கனவே, பஜாஜ் அவென்ஜர் மோட்டார்சைக்கிள் 150சிசி மற்றும் 220சிசி மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய 400சிசி அவென்ஜர் மாடல் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் மார்கெட்டிலிருந்து அதிக பங்களிப்பை பெறும் வாய்ப்புள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கருதுகிறது.

பஜாஜ் அவென்ஜர் 150 மற்றும் 220 மாடல்களில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இந்த புதிய மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றிருக்கும். விலையையும் மிக சவாலாக நிர்ணயிக்கவும் பஜாஜ் திட்டமிள்ளது.


Click it and Unblock the Notifications








