புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் இந்திய அறிமுக விபரம் வெளியீடு!
புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரு பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அப்போதிலிருந்தே இந்த பைக் இந்திய பைக் பிரியர்கள் மத்தியிலும், வாடிக்கையாளர் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், இந்த பைக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து எந்த தகவலையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் வெளியிடவில்லை. இதனால், சற்று ஏமாற்றமான நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த பைக்கின் அறிமுக காலம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது பிஎம்டபிள்யூ.
Recommended Video


அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் கூட்டணியில் இந்த பைக் மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையிலிருந்து பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் உற்பத்தியும் துவங்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இரு பைக் மாடல்களும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஒருவழியாக செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடல்கள் தோற்றத்தில் மிக அட்டகாசமாக இருப்பதாலும், குறைவான விலை பிஎம்டபிள்யூ பிராண்டு பைக் மாடல்களாக வருவதும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்த பைக் மாடல்களில் 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

இந்த பைக்கில் அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ரேடியல் பிரேக் காலிபர் முன்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் நேக்கட் பாடி ஸ்டைலிலும், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் அதன் அட்வென்ச்சர் ரக மாடலாகவும் வர இருக்கிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பை பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் பெற்றிருக்கும்.

கூடுதல் பாடி பேனல்கள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான ராக் ஆகியவற்றுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் சற்று கூடுதல் எடை கொண்டதாக இருக்கும். மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் குறைவான விலை அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளாகவும் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications