எக்ஸ்க்ளூசிவ்: 2018 ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் மற்றும் கோல்டுவிங் வருகை விபரம்!
2018ம் ஆண்டு மாடலாக வெளிவர இருக்கும் புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் மற்றும் புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாக இருக்கிறது என்பதை இந்த செய்தியில் காணலாம்.
2018ம் ஆண்டு மாடல் ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் மற்றும் 2018 ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள்களின் இந்திய வருகை குறித்த தகவல்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஹோண்டா நிறுவனத்தின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களில் வாடிக்கையாளர்களின் மிகுந்த நன்மதிப்பை பெற்ற மாடல்கள் ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக் மற்றும் ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள். இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சஙகளுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் 2018ம் ஆண்டு மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி, புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக் இந்த ஆண்டு நவம்பரிலும், 2018 ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலும் வருகை தர இருப்பது உறுதியாகி உள்ளது.
Recommended Video


புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்
புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் ஃபயர்பிளேடு சூப்பர் பைக்கில் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1 எம் மற்றும் கவாஸாகி இசட்எக்ஸ் 10ஆர் பைக்குகளுக்கு போட்டியாக இந்த மாடலின் டிசைன் அம்சங்கள் தொழில்நுட்ப ரீதியிலும், வசீகரத்தை அதிகரிக்கும் விதத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பது காப்புரிமைக்கு கொடுக்கப்பட்ட படங்களின் மூலமாக தெரிய வந்துள்ளது. பின்புற டிசைனில் மாற்றங்கள் இல்லை.

போட்டியாளர்களை விஞ்ச வேண்டுமெனில், புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக்கின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் 200பிஎச்பி அளவுக்கு மேல் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், இந்த பைக் 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாடலைவிட 5 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

தற்போதைய மாடலைவிட புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக்கின் எடை 8 கிலோ எடை குறைந்துள்ளது. நவீன மின்னணு கட்டுப்பாட்டு சாதனங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, அதி செயல்திறன் மிக்க சூப்பர் பைக்காகவும், சிறந்த கையாளுமையுடன் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஏர் இன்டேக் சிஸ்டம் மற்றும் புதிய ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மூலமாக இந்த பைக்கின் எஞ்சின் சக்தி கூட்டப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் பாஷ் 9.1 எம்பி ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த பைக்கின் எடை ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தில் மட்டும் 6.5 கிலோ வரை குறைந்துள்ளது.

இந்த பைக்கில் பாஷ் நிறுவனத்தின் மின்னணு கட்டுப்பாட்டு சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ட்ராக்ஷன் க்ன்ட்ரோல் சிஸ்டம், ஆன்ட்டி வீலிங் புரோகிராம் மற்றும் ஓலின்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் மூலமாக சிறப்பான பாதுகாப்புடன் இயக்கக்கூடிய சூப்பர் பைக்காக இருக்கும்.

இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் ஓலின்ஸ் செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் தனித்தனியாக நிலையை மாற்றிக் கொள்ளும் சிறப்புடன் வருகிறது. இந்த விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு முதல்முறையாக டுகாட்டி 1299 பனிகாலே எஸ் பைக்கில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக் தற்போதைய மாடலைவிட விலையில் கூடுதலாக விற்பனைக்கு வரும்.

புதிய ஹோண்டா கோல்டுவிங்
உலகின் மிக சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களில் ஒன்றான ஹோண்டா கோல்டுவிங், ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட் மற்றும் இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியான ரகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 1,832சிசி எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 167 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிளில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பபட்டு இருக்கிறது.

இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் 362 கிலோ எடை கொண்டது. எனவே, இந்த மோட்டார்சைக்கிளில் ரிவர்ஸ் கியர் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது சிறப்பான எஞ்சின் என்பதால், அதிக மாற்றங்கள் இருக்காது. அதேநேரத்தில், இதன் பவரும், டார்க் திறனும் 2 சதவீதம் வரை கூட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளின் டிசைனில் சிறிய மாற்றங்களுடன் கவர்ச்சிகரமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தற்போது வெளியாகி இருக்கும் படங்களின் அடிப்படையில் கூடுதல் வசீகரத்துடன் வருவது உறுதியாக தெரிகிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 6 நிலைகளில் மாற்றக்கொள்ளும் வசதி கொண்ட விண்ட்ஸ்கிரீன், நேவிகேஷன் சிஸ்டம், சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் போன்றவை மிக முக்கிய சிறப்பம்சங்களாக தெரிவிக்க முடியும். அலுமினியம் சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

முன்புறத்தில் புதிய சஸ்பென்ஷன் அமைப்பும் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளின் சொகுசு அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையிலும் கூடுதலாக இருக்கும் என்பது எதிர்பார்க்கும் விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








