அடிமாட்டு விலைக்கு சூப்பர் பைக்குகளை விற்க டீலர்கள் ரகசிய முயற்சி ?!
அடிமாட்டு விலைக்கு சூப்பர் பைக்குகளை விற்பனை செய்வதற்கு டீலர்களில் முயற்சி நடப்பதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. 600 சிசி பைக்குகள் ரூ.2 லட்சம் விலையில் விற்பனை செய்வதற்கு முயற்சிகள் நடக்கிறதாம்.
பிஎஸ்-3 பைக்குகள் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை உத்தரவு வாகன மார்க்கெட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. கையிருப்பில் இருந்த பிஎஸ்-3 வாகனங்களை விற்று தீர்க்க பெரும் தள்ளுபடிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன.

இதையடுத்து, ஷோரூம்களில் கூட்டம் அலை மோதியது. நேற்று வரை வாங்கி இருந்தவர்கள் மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சில சூப்பர் பைக் ஷோரூம்களில் இருப்பில் உள்ள சூப்பர் பைக்குகளை பெரும் தள்ளுபடியை கொடுத்து விற்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, கவாஸாகி நின்ஜா 650 பைக் மற்றும் பெனெல்லி 600 போன்ற பைக்குகள் அதிக எண்ணிக்கையில் இருப்பில் தேங்கிவிட்டதாக தெரிகிறது. இவற்றை விற்று தீர்ப்பதற்காக அதிகபட்சமான தள்ளுபடிகளை டீலர்கள் ரகசியமாக வழங்குவதாக தெரிகிறது.

இந்த சூப்பர் பைக்குகளை பாதிக்கு பாதி விலையில் விற்பனை செய்யும் முயற்சிகளும் நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரூ.5.5 லட்சம் விலை மதிப்புடைய கவாஸாகி நின்ஜா 650 பைக்கை ரூ.2.5 லட்சத்திலும், பெனெல்லி 600 பைக்கை ரூ.2 லட்சம் விலையிலும் விற்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், இவற்றில் எந்தளவு உண்மை என்பது தெரிய வில்லை. அதேநேரத்தில், இந்த தள்ளுபடி விற்பனை மிக ரகசியமாக நடக்கிறதாம். இருப்பில் அதிக எண்ணிக்கையிலான பைக்குகள் இருப்பதால் இந்த தள்ளுபடி மூலமாக விற்பனை செய்ய டீலர்கள் ரகசிய முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த பைக்குகளை பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனினும், அதற்கு அதிக செலாவகும் என்பதால், இந்த அதிரடி தள்ளுபடி விற்பனையில் டீலர்கள் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இப்போது அனைத்தும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பைக்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில், முன்தேதியிட்டு இன்வாய்ஸ் போட்டு தருவதில் பிரச்னைகள் உண்டு. ஆனால், வேறு பெயரில் பதிவு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, பின்னர் மாற்றித் தருவார்களா என்பது குறித்த தகவல் இல்லை.

நேற்றைய தேதிக்குள் இன்வாய்ஸ் போடப்பட்டிருந்தால், ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்துவிட முடியும் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். கடைசி வாய்ப்பாக இன்று இந்த ரகசிய விற்பனை முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது.

சட்ட ரீதியில் இனி பிஎஸ்-3 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத நிலையில், டீலர்களில் இதனை எப்படி சாத்தியப்படுத்தி தருவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். எனினும், தள்ளுபடியுடன் சூப்பர் பைக்குகள் வாங்குவதற்கு இது ஒரு வாய்ப்பு என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








