பிஎஸ்-3 இருசக்கர வாகனங்களுக்கான தள்ளுபடி விபரம்!
இருப்பில் உள்ள பிஎஸ்-3 இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இப்போது இருக்கிறது. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பதை இந்த செய்தியில் காணலாம்.
வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. இதையடுத்து, இருப்பில் தேங்கி நிற்கும் இருசக்கர வாகனங்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்குகின்றன இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள். எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பதை இந்த செய்தியில் காணலாம்.

ஹீரோ மோட்டோகார்ப்
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் அதிகம் பாதிக்கப்படும் நிறுவனமாக கருதப்படுகிறது. தற்போது இருப்பு இருக்கும் பிஎஸ்-3 வாகனங்களுக்கு ரூ.12,500 வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஸ்கூட்டர்களுக்கு ரூ.12,500 வரையிலும், பிரிமியம் பைக் மாடல்களுக்கு ரூ.7,500 வரையிலும், சாதாரண வகை பைக்குகளுக்கு ரூ.5,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா தள்ளுபடி விபரம்
ஹோண்டா நிறுவனம் இன்று காலையில் பிஎஸ்-3 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்தது. தற்போது ரூ.22,000 வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஹோண்டா ஷைன், யூனிகார்ன் உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு ரூ.18,300 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா நவி பைக்கிற்கு ரூ.20,000 தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சுஸுகி தள்ளுபடி விபரம்
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது பிஎஸ்-3 ஸ்கூட்டர் மற்றும் பைக் மாடல்களுக்கு ரூ.7,000 வரை வழங்குகிறது. ரூ.5,000 விலையில் தள்ளுபடியாகவும், ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையாகவும் வழங்கப்படுகிறது.

பஜாஜ் தள்ளுபடி விபரம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. விலையில் ரூ.3,000 முதல் ரூ.12,000 வரை தள்ளுபடியாகவும், இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்துள்ளது.

டிவிஎஸ் தள்ளுபடி விபரம்
பிஎஸ்-3 பைக், ஸ்கூட்டர்களுக்கு ரூ.5,000 வரையிலும், மொபட்டிற்கு ரூ.2,500 வரையிலும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தள்ளுபடி வழங்குகிறது.

அப்பாச்சி 200 பைக்கிற்கு தள்ளுபடி
சென்னையில் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கிற்கு ரூ.15,000 வரை தள்ளுபடியும், இலவச இன்ஸ்யூரன்ஸும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா தள்ளுபடி விபரம்
மஹிந்திரா நிறுவனம் இருப்பில் உள்ள பிஎஸ்-3 கஸ்ட்டோ ஸ்கூட்டர் மற்றும் செஞ்சூரோ பைக்கிற்கு ரூ.15,000 வரையிலும், மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு ரூ.25,000 வரையிலும் தள்ளுபடி வழங்குகிறது.

பிரிமியம் பைக்குகளுக்கு தள்ளுபடி
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடலுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுபோன்றே, கவாஸாகி உள்ளிட்ட பிரிமியம் பைக் நிறுவனங்களும் இருப்பில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன.

மாற்று திட்டம்
இதனிடையே, இந்த இக்கட்டான நிலை குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரி எஸ்.ரவிக்குமார் கூறுகையில்," அதிகபட்ச சலுகைகளை வழங்கி இருப்பில் உள்ள இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறோம். அப்படியும் இருப்பில் தேங்கும் இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இந்த அதிரடி தள்ளுபடியை பெற ஷோரூம்களில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த சலுகைகள் இப்போது சிறப்பாக இருந்தாலும், சில ஆண்டுகள் கழித்து மறுவிற்பனை செய்யும்போது நிச்சயம் குறைவான மதிப்பை பெறும் என்று கருதப்படுகிறது. எனவே, வாங்குவதற்கு முன் நன்கு யோசித்து முடிவு எடுப்பதும் அவசியம்.

இன்றே கடைசி
இன்றைய தேதிக்குள் உங்களது பெயரில் பிஎஸ்-3 இருசக்கர வாகனத்தை உங்களது பெயரில் இன்வாய்ஸ் போட்டுவிட வேண்டும். 60 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதிமுறையின்படி, வரும் நாட்களில் உங்களது வாகனம் பதிவு செய்து கொடுக்கப்பட்டுவிடும்.


Click it and Unblock the Notifications








