ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக்கின் தயாரிப்பு திட்டம் கைவிடப்படுகிறது!
ஹீரோ நிறுவனத்தின் எச்எக்ஸ்250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் தயாரிப்பு திட்டத்தை ஹீரோ நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளது. அதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பட்ஜெட் ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், சந்தைப் பங்களிப்பை உயர்த்திக் கொள்வதற்கு ஏதுவாக உயர்ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் இறங்க முடிவு செய்தது.

இதன்படி, புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை தயாரிக்கும் பணியில் இறங்கியது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எச்எக்ஸ்250ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கின் கான்செப்ட் மாடலை பார்வைக்கு வைத்தது.

இந்த பைக் பார்வையாளர்களையும், ஹீரோ மோட்டார்சைக்கிள் பிரியர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளையும் அந்த நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.

இந்த சூழலில், இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கின் தயாரிப்பை கைவிட ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு தலைமை அதிகாரி மார்கஸ் பிரான்ஸ்பெர்கர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

"இந்தியாவில் 250சிசி மற்றும் அதற்கு குறைவான திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது. 300சிசி மற்றும் அதற்கு மேலான திறன் கொண்ட ரக பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

எனவே, தற்போதைய மார்க்கெட் நிலவரத்தை வைத்து பார்க்கும்போது 250சிசி திறன் கொண்ட பைக்குகளைவிட 300சிசி திறனுக்கும் மேலான பைக்குகளை அறிமுகம் செய்வதே சாலச் சிறந்ததாக இருக்கும். எனவே, எச்எக்ஸ்250ஆர் பைக்கின் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில், மிக நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் எச்எக்ஸ்250ஆர் பைக்கைவிட சிறந்த பைக் மாடலை மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்கும் திட்டம் உள்ளது," என்று கூறி இருக்கிறார். இதனால், பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்த ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக்கின் தயாரிப்புக்கு ஹீரோ முழுக்கு போட்டுவிட்டது.

ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக்கில் இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல் நேர விளக்குகள், எஞ்சினுக்கு கீழாக அமைக்கப்பட்ட சைலென்சர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்பிளிட் இருக்கைகள் போன்ற பல சிறப்பம்சங்கள் இருந்தன. சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டு டிரைவிங் மோடுகளும் இருந்தன.
Recommended Video


இந்த பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 31 பிஎச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0- 60 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டிவிடும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இருந்தன.

ஹோண்டா நிறுவனம் பிரிந்த பின்னர் புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்வதில் ஹீரோ மோட்டோகார்ப் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கும் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில், திடீரென தனது 250சிசி பைக் தயாரிப்பை நிறுத்த ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்திருப்பது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications








