மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்
விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய 2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் படங்கள் வெளியாகியுள்ளன. அது குறித்த தகவல்களை காணலாம்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹோண்டா டியோ ஸ்கூட்டர் இலங்கை , நேபாளம் , மெக்சிகோ மற்றும் கொலம்பியோ போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஹோண்டா நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படும் மாடலாகவும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரில் ஒன்றாகவும் டியோ விளங்குகின்றது.

யமஹா ரே, மஹிந்திரா கஸ்டோ, டிவிஎஸ் ஹூபிடர் என போட்டியாளர்கள் இருந்தாலும் ஹோண்டா டியோ அதன் கவர்சிகரமான ஸ்போர்டி லுக் காரணமாக பலதரப்பினராலும் பெரிதும் விரும்பப்படுகிறது.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகன தயாரிப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் ஹோண்டா டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புதிய டியோவின் ஸ்பை படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

டியோ ஸ்கூட்டர் ஏற்கெனவே ஸ்டைலிங்கில் சிறந்து விளங்கும் நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய டியோ மேலும் கவர்ச்சிகரமாக உள்ளது. முகப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது புதிய 2017 டியோ.

புதிய பாடி கிராஃபிக்ஸ், டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம் மற்றும் முன்பக்க வைசரில் புதிதாக ஒரு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்ஈடி விளக்காக இருக்கலாம். நடப்பு மாடல் டியோவில் உள்ள வைசரில் எந்த விளக்குகளும் இல்லாத நிலையில் இது குறிப்பிடத்தக்க மாற்றமாக உள்ளது.

மந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைப்படி இந்த ஹோண்டா டியோ தயாரிக்கப்பட்டுள்ளதால் இதில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு சான்று பெற்ற இஞ்சின் உள்ளது. மேலும் ஆட்டோமேடிக் ஹெட்லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் மாற்றங்கள் இருந்தாலும் இதில் இயந்தரவியல் மாற்றங்கள் ஏதும் இல்லை. முன்பிருந்த காற்றால் குளிர்விக்கப்படும் 109.2 சிசி இஞ்சின் தான் இதில் உள்ளது. இந்த 4 ஸ்ட்ரோக் இஞ்சின் அதிகபட்சமாக 8 பிஹச்பி ஆற்றலையும், 8.77 என்எம் டார்க்கையும் வழங்கும்.

பாரத் ஸ்டேஜ்-4 இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட், புதிய பாடி கிராஃபிக்ஸ், கூடுதல் முகப்பு விளக்கு என காஸ்மெடிக் மாற்றங்களை கண்டுள்ள புதிய ஹோண்டா 2017 டியோ ஸ்கூட்டர் பழைய விலையை விடவும் 3,000 முதல் 4,000 ரூபாய் கூடுதல் விலை கொண்டதாக இருக்கலாம்.

2002 முதல் விற்பனையில் உள்ள டியோ ஸ்கூட்டர் 10 லட்சம் என்ற விற்பனை இலக்கினை கடந்த ஆண்டில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள மாடலான 2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் சென்னை ஆன்ரோடு விலை ரூ.57,134).

லிட்டருக்கு 60 கிமீ வரை மைலேஜ் தரவல்ல ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டு வெளிவர உள்ளதால், ஸ்கூட்டர் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் புதிய டியோவிற்காக சிறிது நாட்கள் பொறுத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








