புதிய ஸ்கூட்டர் மாடலை களமிறக்கும் ஹோண்டா: முன்பதிவு விபரம்
இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டருக்கான முன்பதிவு உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் எட்ட முடியாத இடத்தில் ஆக்டிவா ஸ்கூட்டரை வைத்து ஆட்டி படைத்து வருகிறது. இந்த நிலையில், தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா.

கிரேஸியா என்ற பெயரில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 25ந் தேதி முதல் இந்த புதிய ஸ்கூட்டருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. ரூ.2,000 முன்பணம் செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா இருசக்கர வாகன டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஹோண்டா டியோ ஸ்கூட்டர் போன்றே, இந்த புதிய ஸ்கூட்டர் மாடலும் நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும், இளம் தலைமுறையினரை கவரும் வகையிலும் இருக்கும். இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே சில ஹோண்டா டீலர்களில் தென்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டர் மிக சிறப்பான வடிவமைப்புடன் வர இருப்பது ஸ்பை படம் மூலமாக தெரிய வருகிறது. இந்த ஸ்கூட்டரில் வி வடிவிலான ஹெட்லை்ட அமைப்புடன், பிற ஹோண்டா ஸ்கூட்டர்களிலிருந்து சற்றே வேறுபட்ட டிசைன் சிறப்பம்சங்களுடன் வருகை தர இருக்கிறது.

ஆக்டிவா ஸ்கூட்டரில் இருப்பது போன்ற முன்சக்கரம் தெரிகிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஹோண்டாவின் விசேஷமான காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஸ்கூட்டரில் ஆக்டிவாவில் பயன்படுத்தப்படும் 110 சிசி எஞ்சின் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், 125சிசி எஞ்சின் ஆப்ஷனும் ஹோண்டா வசம் இருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்கூட்டர் மூலமாக ஹோண்டாவின் சந்தை மிக வலுவாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








