புதிய யமஹா ஆர்15 வி 3.0 மற்றும் ஆர்3 பைக்குகளின் இந்திய வருகை விபரம்!
புதிய யமஹா ஆர்15 மற்றும் ஆர்3 பைக்குகளின் இந்திய வருகை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் யமஹா ஆர்15 இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலமான மாடலாக விளங்குகிறது. ஏற்கனவே, இந்த பைக் மேம்படுத்தப்பட்டு வெர்ஷன் 2.0 என்ற மாடலில் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போது புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வெர்ஷன் 3.0 மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த புதிய யமஹா பைக்குகளின் அறிமுக விபரத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவிலோ அல்லது அதற்கு சிறிது முன்னதாகவோ இந்த புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

முதலில் யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் தகவல்களை பார்க்கலாம். புதிய யமஹா ஆர்15 வி 3.0 மாடலில் விலையை கட்டுக்குள் வைத்து நிர்ணயிப்பதற்காக சில விலை உயர்ந்த ஆக்சஸெரீகளுக்கு பதிலாக சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அதன்படி, அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுக்கு பதிலாக டெலிஸ்கோப்பிக் ஃபோர்கக்குகளுடன் முன்புற சஸ்பென்ஷன் இந்திய மாடலில் இடம்பெறும். அதேபோன்று, எம்ஆர்எஃப் டயர்கள் இந்திய மாடலில் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய யமஹா ஆர்15 வி 3.0 மாடலின் டிசைன் தாத்பரியங்கள் யமஹா ஆர்1 சூப்பர் பைக்கிலிருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள், கூர்மையாக தோற்றமளிக்கும் ஹெட்லைட் ஸ்கூப்புகள், ஹெட்லைட்டுக்கு நடுவில் இருக்கும் காற்று புகுவதற்கான அமைப்பு ஆகியவை மிரட்டலாக இருக்கிறது.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருப்பதுடன், கியரை விரைவாக குறைப்பதற்கான ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இடம்பெற்றிருக்கும்.
Recommended Video


புதிய யமஹா ஆர்15 வி 3.0 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக இருக்கலாம். இந்த புதிய மாடல் நிச்சயம் இளைஞர்களை வெகுவாக கவரும்.

புதிய யமஹா ஆர்15 வி 3.0 பைக் மாடலை தவிர்த்து, புதிய யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-4 மாசு விதிகள் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பிஎஸ்-4 மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 321சிசி எஞ்சின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

முதல்முறையாக யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வர இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கும். புதிய மாடல் மூன்று புதிய வண்ணங்களில் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








