புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்கள் இந்திய அறிமுக விபரம்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் கால அளவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 7ந் தேதி இத்தாலியில் நடந்த சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு சக்திவாய்ந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்தது.

இந்த இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களும் முதலில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது இந்திய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு சற்று ஏமாற்றம் தந்தது.

இந்த நிலையில், கடந்த 17ந் தேதி முதல் 19ந் தேதி வரை கோவாவில் நடந்த ரைடர் மானியா நிகழ்வில், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் முதல்முறையாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்தது ராயல் என்ஃபீல்டு.

மேலும், இந்தியாவில் இந்த இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கால அளவு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. கார் அண்ட் பைக் தளத்தின் தகவலின்படி, அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இந்த இரண்டு புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து அனைத்து ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களிலும் இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் கூறி இருக்கிறார்.

இந்த இரு மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் புத்தம் புதிய 650சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 46.3 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 120 முதல் 135 கிமீ வரையிலான க்ரூஸிங் வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கும்.

மேலும், இந்த மோட்டார்சைக்கிள்கள் மிக தரமான கட்டமைப்பையும், உதிரிபாகங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்டு தலைமை அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும், சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு பிரியர்களின் எதிர்பார்ப்புகளை இந்த இரு சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களும் நிறைவு செய்யும் என்று கருதப்படுகிறது.
Tamil Car and bike fans - Like us on Facebook


Click it and Unblock the Notifications








