ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் வருகிறது புதிய சுஸுகி இன்ரூடர் 150 மோட்டார் சைக்கிள்!!
ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
யாரும் எதிர்பாராத நேரத்தில், புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுஸுகி நிறுவனத்தின் உலக புகழ்வாய்ந்த இன்ட்ரூடர் என்ற க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களில் மிக குறைவான விலை கொண்ட மாடலாகவும் அறிமுகமானது.

சுஸுகி இன்ட்ரூடெர் 800 மற்றும் இன்ட்ரூடெர் 1800 போன்ற சக்திவாய்ந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களின் டிசைன் தாத்பரியங்களுடன் வந்த இந்த புதிய இன்ட்ரூடெர் 150 பைக் இந்தியர்களை திகைக்க வைத்தது.

டிசைன் பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், விலை குறைவான க்ரூஸர் ரகத்தில் பஜாஜ் அவென்ஜர் மட்டுமே ஒரே தேர்வு என்ற நெருக்கடியை மாற்றி இருக்கிறது புதிய இன்ட்ரூடெர் 150 பைக்.

பஜாஜ் அவென்ஜர் 150 மோட்டார்சைக்கிளைவிட எல்இடி டெயில் லைட்டுகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை கூடுதல் அம்சங்களாக இருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த நிலையில், இந்த மோட்டார்சைக்கிளின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சின் கொண்ட மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் ரூ.98,340 எக்ஸ்ஷோரூம் விலையில் வந்த நிலையில், ப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடல் ரூ.10,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலில் வந்தாலும், பஜாஜ் அவென்ஜர் மார்க்கெட்டை சுஸுகி இன்ட்ரூடெர் 150 உடைக்கும் என்று கூற முடியாத நிலை இருக்கிறது.

விலை, எஞ்சின், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்களை கொண்டிருந்தாலும், அவென்ஜர் அளவுக்கு டிசைனில் இன்ட்ரூடெர் 150 வாடிக்கையாளர்களை கவருமா என்பது போக போகத்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications








