டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட்ஸ் பைக்கின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அகுலா என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கின் கான்செப்ட் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. டிவிஎஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக இருந்ததும், முதல் புல் ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருந்ததும், அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற செய்தது.

அகுலா என்ற பெயரிலான அந்த கான்செப்ட் பைக்கை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம். மேலும், அந்த பைக்கை மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கும் உட்படுத்தி இருந்தது.

தனது வெற்றிகரமான அப்பாச்சி பிராண்டிலேயே இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பெயரில் வர இருக்கும், இந்த பைக் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

வரும் டிசம்பர் 6ந் தேதி புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டிவிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மிக நேர்த்தியான டிசைன், மிரட்டலான தோற்றத்துடன் வரும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 313சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 300சிசி பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 390 உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு சவாலான விலையில் இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் விற்பனைக்கு வர இருக்கிறது.

இதுவரை 200சிசி ரகத்திலான பைக்குகளை விற்பனை செய்து வந்த டிவிஎஸ் நிறுவனம், தற்போது சந்தைப் போட்டி மிகுந்த 300சிசி மார்க்கெட்டிலும் களமிறங்க உள்ளது. நிச்சயம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








