தொடர்ந்து 5 மணி நேரம் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் சாகசம் செய்து சாதனை!
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நேற்று டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அப்பாச்சி பைக்குகளில் வீரர்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வாகன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்களுக்கு காட்டும் விதமாக பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். விளம்பரம், சாகச நிகழ்ச்சிகள், நீண்ட தூர பயணங்கள் மூலமாக தங்களது தயாரிப்புகளின் உன்னதத்தை வாடிக்கையாளர்களுக்கு நிரூபிக்க முயல்கின்றனர்.
அந்த வகையில், டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி பைக்குகளின் நம்பகத்தன்மையை உலகுக்கு காட்டும் விதத்தில், நேற்று சென்னையில் சாகச நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அப்பாச்சி புரோ பெர்ஃபார்மென்ஸ் எக்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சாகச நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடந்தது. இதில், டிவிஎஸ் நிறுவனத்தின் 5 சாகச அணிகள் பங்கு கொண்டன.

நண்பகல் 12 மணிக்கு துவங்கிய இந்த சாகச நிகழ்ச்சியானது மாலை 5 மணி வரை நடந்தது. டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் தொடர்ந்து 5 மணி நேரம் சாகசம் செய்து அசத்தினர் டிவிஎஸ் சாகச அணியை சேர்ந்த வீரர்கள்.

சாகச நிகழ்ச்சியின்போது அப்பாச்சி பைக்குகளின் எஞ்சின் செயல்திறன், டிரான்ஸ்மிஷன் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளின் திறன்களை முடிந்தளவு சோதித்து பார்த்தனர் டிவிஎஸ் அணி வீரர்கள். இது பார்ப்போரை சிலிர்க்க வைத்தது. மேலும், டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் காட்டும் விதத்தில் அமைந்தது.

வீலி சாகசம் செய்யும்போது எஞ்சின் அதிகபட்ச சுழல் வேகத்தில் திடீரென க்ளட்ச் பிடிக்கப்படும்போது, எஞ்சினுக்குள் இருக்கும் பிஸ்டன், க்ராங்க்சாஃப்ட் உள்ளிட்ட பாகங்கள் எந்தளவு நெருக்கடியை சந்திக்கும் என்பது தெரிந்ததே. அதேபோன்று, ஸ்டாப்பி சாகசம் செய்யும்போது, முன்புற சஸ்பென்ஷனும், பிரேக்கும் கடுமையைன நெருக்கடி நிலையை சந்திக்கும். ஆனால், அதனையெல்லாம் அனாயசமாக சமாளிக்கும் திறனை இந்த அப்பாச்சி பைக்குகள் பெற்றிருப்பதை உணர்த்தும் விதமாக இந்த சாகச நிகழ்ச்சி நடந்தது.

இந்த சாகசத்தில் அணிக்கு தலா 3 அப்பாச்சி பைக்குகள் வீதம் மொத்தமாக 15 அப்பாச்சி பைக்குகள் பயன்படுத்தப்பட்டன. இந்த சாகச நிகழ்ச்சியின்போது அனைத்து அப்பாச்சி பைக்குகளும், வீரர்களும் சளைக்காமல் சாகசங்களை நிகழ்ச்சி காட்டி அசரடித்தனர்.

இந்த பைக் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர்கள் தொழில்முறை சாகச வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் வாய்ந்தவர்கள். இந்த நிலையில், 15 அப்பாச்சி பைக்குகளும் ஒரே நேரத்தில் பர்ன் அவுட் சாகசம் செய்தது இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான விஷயமாக அமைந்தது.

டிவிஎஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளின் திறனையும், நம்பகத்தன்மையையும் காட்டும் விதத்தில், ராலி பந்தயங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், தனது தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை ஒரு படி மேலே கொண்டு செல்லும் விதத்தில், இந்த சாகச நிகழ்ச்சியை நடத்திக் காட்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








