அம்மா ஸ்கூட்டர் திட்டத்தால் இப்படி ஒரு பிரச்னையில் சிக்கி கொண்ட பெண்கள்... இதற்கு காரணம் இவர்தான்...
அம்மா ஸ்கூட்டர் திட்டத்தால், பெண்கள் பெரும் பிரச்னை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஒரு சேர வரவழைக்கலாம்.
அம்மா ஸ்கூட்டர் திட்டத்தால், பெண்கள் பெரும் பிரச்னை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஒரு சேர வரவழைக்கலாம்.

வேலைக்கு செல்லும் மற்றும் சுய தொழில் புரியும் பெண்களுக்கு, மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என்பது, மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்று.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போதே மானிய விலையில் பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்குவது தொடர்பான திட்டம் குறித்த அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.

இதன்பின் தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சராக பதவியேற்றதும், பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்.

இதன்பின் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா அறிவித்தபடியே அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை, ஜெயலலிதா பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24ம் தேதி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வேலைக்கு செல்லும் மற்றும் சுய தொழில் புரியும் பெண்களுக்கு, அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ், மானிய விலையில், இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீத தொகை அல்லது 25 ஆயிரம் ரூபாய் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மானியமாக வழங்கப்படும்.

இவை இரண்டில் எது குறைவான தொகையோ, அந்த பணம்தான் மானியமாக பெண்களுக்கு வழங்கப்படும். அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருக்க வாகனங்கள் வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற விரும்பும் பெண்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து, தகுதியுடைய பெண்களை தேர்வு செய்வர்.

இதன்படி நடப்பாண்டில், அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ், மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற தகுதியுடைய பெண்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஆனால் அவர்களை தமிழக அரசு தற்போது பெரும் பிரச்னையில் இழுத்து விட்டுள்ளது.

ஆம், அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ், மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற தேர்வு செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தற்போது பெரும் கடன் சுமையில் சிக்கி கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ''அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ், மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற நான் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டபோது மிகுந்த உற்சாகம் அடைந்தேன்.

அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், எனது கணவருடன் சேர்ந்து, அருகில் உள்ள டூவீலர் ஷோரூமிற்கு சென்றேன். மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற நான் தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷயத்தை அவர்களிடம் கூறினேன்.

அத்துடன் வங்கி லோனுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் விஷயத்தையும் அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் இதை எல்லாம் அவர்கள் காதில் வாங்கி கொள்ளவே இல்லை. உடனடியாக முழு பணத்தையும் செலுத்த வேண்டும் எனக்கூறினார்கள்.

எனவே வேறு ஷோரூம்களிலும் கேட்டு பார்த்தேன். அவர்களும் அதையேதான் கூறினர். 'ரெடி கேஷ்' மட்டுமே அவர்களின் இலக்காக இருந்தது. எனக்கு வேறு வாய்ப்பு இல்லாததால், எனது நகையை அடமானமாக வைத்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்றேன்.

அந்த பணத்தின் மூலம் புதிய இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினேன். ஆனால் எனக்கு இன்னமும் மானிய தொகை கிடைக்கவில்லை. மானிய தொகை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்தான், நகையை அடமானம் வைத்து இரு சக்கர வாகனம் வாங்கினேன்.

ஆனால் இன்னமும் மானியம் கிடைக்காததால், மாதந்தோறும் வட்டி கட்டி கொண்டிருக்கிறேன். மானியம் கிடைக்காததால், என்னைப்போன்று பலர் கடன் சுமையில் சிக்கி தவித்து கொண்டுள்ளனர். பிறகு ஏன் மானிய விலையில் இரு சக்கர வாகனம் என அறிவிக்க வேண்டும்'' என்றார்.

அம்மா ஸ்கூட்டர் திட்ட பயனாளிகளுக்கு லோன் வழங்க வங்கிகளும் மறுக்கின்றன. வங்கிகள் லோன் தர மறுத்து விட்டதன் காரணமாக, மொத்தம் 90 சதவீத பயனாளிகள் பணத்தை செலுத்திதான் இரு சக்கர வாகனங்களை வாங்கியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''லோனை திரும்ப செலுத்த பயனாளிகளால் முடியவில்லை என்றால், அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை, எங்களால் மூன்று ஆண்டுகள் வரை பறிமுதல் செய்ய முடியாது. அதனை விற்பனை செய்யவும் முடியாது.

நிலைமை இப்படி இருக்கையில், வாங்கிய லோனை திரும்ப செலுத்தவோ அல்லது அதற்கு உண்டான வட்டியை கட்டவோ பயனாளிகள் மறுத்து விட்டால், நாங்கள் என்ன செய்வது? எனவேதான் பெரும்பாலான வங்கிகள் லோன் தர மறுக்கின்றன'' என்றார்.

இதுகுறித்து மற்றொரு பெண் கூறுகையில், ''முழு பணத்தையும் நாங்களே செலுத்தி இரு சக்கர வாகனத்தை வாங்குகிறோம். மானிய தொகையும் கிடைப்பதில்லை. லோன் தர வங்கிகளும் மறுக்கின்றன. பிறகு எதற்காக இந்த திட்டம்? என்பதே புரியவில்லை. மக்கள் பணத்தை சுருட்டுவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்களை கடன் சுமையில் சிக்க வைத்து விட்டார்'' என்றார்.

ஜெயலலிதா வழியில் செயல்படுவதாக தமிழக அரசு அவ்வப்போது கூறி வருகிறது. ஆனால் அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள சூழலில் (நாளை டிசம்பர் 5), ஜெயலலிதாவின் கனவு திட்டத்திலேயே பல்வேறு குளறுபடிகள் நிலவி வரும் தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








