பெனெல்லி லியோன்சினோ ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்திய வருகை விபரம்!!
அடுத்த ஆண்டு பெனெல்லி லியோன்சினோ பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்க்ராம்ப்ளர் ரகத்தை சேர்ந்த இந்த பைக்கை மஹாவீர் குழுமத்தின் வர்த்தக கூட்டணியுடன் இந்தியாவில் களமிறக்க உள்ளது பெனெல்லி.
அடுத்த ஆண்டு பெனெல்லி லியோன்சினோ பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்க்ராம்ப்ளர் ரகத்தை சேர்ந்த இந்த பைக் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெனல்லி லியோன்சினோ பைக் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனாால், பெனெல்லி நிறுவனத்தின் இந்திய கூட்டணி நிறுவனமாக செயல்பட்ட டிஎஸ்கே குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், தற்போது இந்த பைக்கின் அறிமுகம் தள்ளிப்போய் உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த மஹாவீர் குழுமத்துடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் வர்த்தகத்தை தொடர இருக்கும் பெனெல்லி நிறுவனம் புதிய லியோன்சினோ ஸ்க்ராம்ப்ளர் பைக்கை இந்தியா கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ பைக்கில் 499.6சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய இந்த எஞ்சின் அதிகபட்சமாக 46 பிஎச்பி பவரையும், 45 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பெனெல்லி லியோன்சினோ பைக்கில் 50மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 320மிமீ விட்டமுடைய இரட்டை டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் உண்டு.

இதுதவிர்த்து, பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ், இம்பீரியல் 400 உள்ளிட்ட மாடல்களுக்கு மஹாவீர் குழுமம் இந்தியாவில் களமிறக்குவதற்காக விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தின்படி, இந்திய மார்க்கெட்டுக்கு தக்கவாறு மாறுதல்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

இதில், பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் சாகச பயன்பாட்டுக்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளாகவும், இம்பீரியல் 400 மாடலானது பாரம்பரிய டிசைன் அம்சங்களை பெற்ற மோட்டார்சைக்கிளாகவும் இருக்கும். இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும், பல புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்புடன் பெனெல்லி- மஹாவீர் குழுமம் திட்டங்களை தீட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. பெனெல்லி லியோன்சினோ மோட்டார்சைக்கிள் ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கைவிட மிக குறைவான விலையில் வரும் என்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications