ஒரு நிமிடத்தில் பைக்குகளை திருடி விடும் கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவால் சிக்கினர்.. பகீர் தகவல்கள்
ஒரு நிமிடத்தில் பைக்குகளை திருடி விடக்கூடிய பிரபல பைக் கொள்ளையர்கள் மூவரை, சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு நிமிடத்தில் பைக்குகளை திருடி விடக்கூடிய பிரபல பைக் கொள்ளையர்கள் மூவரை, சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அருகே உள்ள வர்தூர், திலக் நகர், மைக்ரோ லே அவுட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டு வந்தன.

இதனால் வாகன உரிமையாளர்கள் கலக்கம் அடைந்தனர். எனவே டூவீலர் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தி வந்த தனிப்படை போலீசார், தற்போது 3 கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொள்ளையர்களிடம் இருந்து 10 ராயல் என்பீல்டு புல்லட், 2 கேடிஎம் டியூக், 2 பஜாஜ் பல்சர், தலா ஒரு ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் ஹோண்டா டியோ என மொத்தம் 16 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய்.

அஜ்மத் கான் (24), சந்தோஷ் (23) மற்றும் மஞ்சுநாத் (25) ஆகிய மூவர்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள். இவர்கள் மூவரும் பெங்களூரு அருகே உள்ள அத்திப்பள்ளி மற்றும் ஆனேக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. Bangalore Mirror வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த கொள்ளை கும்பலுக்கு அஜ்மத் கான்தான் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார்.

இவர்கள் மூவரும் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். இதனால் டூவீலர்களை கொள்ளையடித்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். நன்கு பராமரிக்கப்பட்டு வரும் புத்தம் புதிய டூவீலர்களைதான் இவர்கள் குறி வைத்து கொள்ளையடித்துள்ளனர்.

குறிப்பாக ராயல் என்பீல்டு புல்லட்டுகளை அதிகமாக குறி வைத்துள்ளனர். ஒரு பைக்கை திருடுவது என முடிவு செய்து விட்டால், அதன் லாக்கை (Lock) வெறும் ஒரு நிமிடத்தில் உடைத்து விடுவதில், இவர்கள் மூவரும் கை தேர்ந்தவர்கள்.

தங்களுக்கு தெரிந்த ஒரு மெக்கானிக்கிடம் இருந்து இந்த தந்திரத்தை மூவரும் கற்று தேர்ந்துள்ளனர். பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளில் திருடிய பைக்குகளை விற்பனை செய்ய தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் இவர்களுக்கு உதவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுதவிர நேரடியாகவும் சில வாடிக்கையாளர்களை சந்தித்து, திருடப்பட்ட பைக்குகளை அவர்களின் தலையில், இந்த மூவர் கும்பல் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. விலை உயர்ந்த புத்தம் புதிய பைக்குகளை வெறும் 20,000-30,000 என்ற விலையில் அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

விலை குறைவு என்பதால், வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வ மிகுதியில் இவர்களிடம் பைக்குகளை வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கும்பல் சமீபத்தில் வர்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ராயல் என்பீல்டு புல்லட் பைக் ஒன்றை திருடியது. அந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. Sagar Patel என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோவை அடிப்படையாக வைத்துதான் மூவர் கும்பலை, தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது வாகன உரிமையாளர்களுக்கு தனிப்படை போலீசார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் முறையாக பார்க்கிங் செய்யும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். அத்துடன் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வாகனங்களில் ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ்களை பொருத்தி கொள்ளும்படியும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications