பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த சாகச ரக பைக்குகள் அறிமுகம்!!
பிஎம்டபிள்யூ F 750 GS மற்றும் F 850 GS ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரண்டு மாடல்களுமே இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன. 853 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு சக்திவாய்ந்த சாகச ரக பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த பைக் மாடல்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ F 750 GS மற்றும் F 850 GS ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரண்டு மாடல்களுமே இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பிஎம்டபிள்யூ F 750 GS பைக்கிற்கு ரூ.11.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், F 850 GS பைக்கிற்கு ரூ.12.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் டூரர் ரகத்தை சேர்ந்த இந்த இரண்டு பைக்குளும் பழைய மாடல்களிலைவிட வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் வந்துள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஃபேரிங் பேனல்கள் முந்தைய மாடலைவிட கூர்மையான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இருப்பது வசீகரத்தை அதிகரித்துள்ளது.

இருக்கைக்கு கீழே கொடுக்கப்பட்டு இருந்த பெட்ரோல் டேங்க் தற்போது சாதாரணமான முறையில் தனியாக கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய மாற்றமாக கூறலாம். F 750 GS பைக்கில் சாதாரண சாலைக்கான டயர்களும், அலாய் வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. F 850 GS மாடலில் டியூவல் ஸ்போர்ட் டயர்களும், ஸ்போக் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் உயரமான விண்ட் ஸ்க்ரீன் மற்றும் கைகளை பாதுகாக்கும் நக்குள் கார்டுகளுடன் வந்துள்ளது.

இந்த மாடல்களில் சாலை நிலைகளுக்கு ஏற்ப மாற்றும் வசதியை அளிக்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. F 850 GS மாடலில் கூடுதலாக என்டியூரோ புரோ என்ற விசேஷ ரைடிங் மோடு கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

இந்த இரண்டு பைக் மாடல்களிலுமே 853சிசி திறன் கொண்ட பேரரல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் ஒன்று என்றாலும், பவரை வெளிப்படுத்தும் திறனில் மாறுபடுகின்றன.

F 750 GS பைக்கில் இருக்கும் எஞ்சின் 75 பிஎச்பி பவரையும், F 850 GS மாடலில் இருக்கும் அதே எஞ்சின் 93 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்திலும் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் சிஸ்டமும் உள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.

இந்த புதிய மாடல்களில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் மல்டி இன்பர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விருப்பத்தின்பேரில் 6.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து பொருத்திக் கொள்ளலாம்.

இந்த விசேஷ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை பொருத்தும்போது பைக்கை ஓட்டுபவர் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு அழைப்புகளை செய்ய முடியும். நேவிகேஷன், பாடல்களை கேட்பது உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும்.

இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகள் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா மற்றும் ட்ரையம்ஃப் டைகர் 800 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். இந்த புதிய பிஎம்டபிள்யூ சாகச பைக்குகள் அதிக சிறப்பம்சங்களுடன், மிக சவாலான விலையில் மார்க்கெட்டிற்கு வந்துள்ளதால் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications