ரேஸ் ஓட்டிகளை “நொறுக்கிய” போலீஸ்…! கெத்து எல்லாம் வெத்து ஆனது..!
தமிழகத்தில் சமீப காலமாக சாலைகளில் பைக் ரேஸ் செல்லும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் இளைஞர்கள் அதிக அளவில் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சமீப காலமாக சாலைகளில் பைக் ரேஸ் செல்லும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் இளைஞர்கள் அதிக அளவில் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் 350 சிசி, 500 சிசி பைக்குகள் கிடைத்த பின்பு பெரும்பாலானோர் அந்த பைக்கில் சாலைகளில் சாகசம் செய்ய விரும்புகின்றனர். இதற்காக நண்பர்கள் எல்லாம் குழுவாக சேர்ந்து வார விடுமுறை நாட்களிலோ அல்லது பொது விடுமுறை நாட்களிலோ இரவு நேரங்களில் சாலைகளில் மின்னல் வேகத்தில் பறந்து வருகின்றனர்.

மேலும் சாலையில் செல்லும் போது முன் வீலை தூக்கி பைக் ஓட்டுவது, பைக்கை நிறுத்தும் போது ஸ்டாப்பி செய்வது, பைக்குகளில் வேகமாக செல்லும் போது ஏதேனும் இரும்பு பொருளை தரையில் உரசும்படி வைத்து அதன் மூலம் தீப்பொறிகளை கிளப்பி கொண்டே செல்வது என இளைஞர்கள் விதவிதமான சாகசங்களில் இறங்கிவிட்டனர்.

இது மட்டும் இல்லாமல் ஒருவருடன் ஒருவர் பொது சாலைகளில் கூட்ட நெரிசலான இடங்களிலும் மின்னல் வேகத்தில் பறப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டே வருகின்றனர்.

இது எந்த அளவிற்கு சென்றது என்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் பழனிச்சாமி வீட்டின் முன்பே இளைஞர்கள் இந்த பைக் ரேஸில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை டிஜிபி அலுவலகம் அருகிலேயும் இளைஞர்கள் அடுத்த பைக் ரேஸை நடத்தினர்.

ரோட்டில் பொது மக்களையும் மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் அவர்கள் வாகனங்களை இயக்கினர். இதையடுத்து போலீசார் எடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைக்கு பின்பு சில மாதங்கள் இது குறைந்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சில இளைஞர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பைக் ரேஸில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து போலீசார் சென்னை ஆர்கே சாலை, கதீட்ரல் சாலை, அண்ணாசாலை,ஸ்டெர்லிங் சாலை உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சில இளைஞர்கள் சாலையில் வீலிங், ஸ்டாப்பி செய்து கொண்டும், இரும்புகளை தரையில் உரசி தீப்பொறி ஏற்படும் வகையில் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

இதையடுத்து பல்வேறு பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 15 பேரை கைது செய்துள்ளதுடன், 9 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக இளைஞர்களை இந்த பைக் ரேஸ் கலாச்சாரம் வெகுவாக கவர்ந்து வருகிறது. இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது. அத்துடன் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களையும் அவர்கள் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு ஏன், அவர்கள் ஹெல்மெட் கூட அணியாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களுக்கு மட்டும் அல்லாது அதே ரோட்டில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இது போன்ற சம்பவம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தாலும் போலீசார் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றே பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுகிறது. இதை கருத்தில் கொண்டு போலீசார் எதிர்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
Source :புதிய தலைமுறை


Click it and Unblock the Notifications