ரூ.19,999 மாதத் தவணையில் டுகாட்டி பைக்குகளுக்கு விசேஷ கடன் திட்டம்!
சூப்பர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற டுகாட்டி நிறுவனம் சொந்த நிதி நிறுவனம் மூலமாக தனது பைக்குகளுக்கு கடன் வழங்கும் சேவையை துவங்கி இருக்கிறது.
சூப்பர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற டுகாட்டி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சொந்த நிதி நிறுவனம் மூலமாக தனது பைக்குகளுக்கு கடன் வழங்கும் சேவையை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த விசேஷ கடன் திட்டங்களை டுகாட்டி நிறுவனம் வழங்க உள்ளது.

வாடிக்கையாளரின் வருமானம், பட்ஜெட் இவற்றை மனதில் கொண்டு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தகுந்தவாறான பிரத்யேக கடன் திட்டத்தை வழங்குவதாகவும் டுகாட்டி தெரிவித்துள்ளது. இது டுகாட்டி சூப்பர் பைக் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இந்த கடன் திட்டம் சிறப்பானதாக அமையும்.

அறிமுகச் சலுகையாக டுகாட்டி சூப்பர் பைக் வாங்குபவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தையும் அறிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட டுகாட்டி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.19,999 மாதத் தவணையில் கடன் திட்டமும் வழங்கப்படுவதாக டுகாட்டி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பம்போல திருப்பிச் செலுத்துவதற்கான நீண்ட கால கடன் திட்டம் மற்றும் குறைவான வட்டி விகிதத்திலான கடன் திட்டமும் வழங்கப்படுவதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுகாட்டி சூப்பர் பைக்குகளுக்கு கூடுதலாக வாங்கப்படும் ஆக்சஸெரீகளுக்கும் கடன் திட்டத்தையும் டுகாட்டி நிதி நிறுவனம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனால், டுகாட்டி பைக்குகளை சிறப்பாக கஸ்டமைஸ் செய்து வாங்குவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூர், கொச்சி, கொல்கத்தா, புனே மற்றும் ஆமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள டுகாட்டி டீலர்ஷிப்புகளிலும் இந்த சிறப்பு கடன் திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

டுகாட்டி நிறுவனமே நேரடியாக கடன் திட்டத்தை வழங்குவதும், சிறப்புச் சலுகைகளை அறிவித்து இருப்பதும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி டுகாட்டி பைக்குகளின் விற்பனையும் அதிகரிக்கும் என்றும் கருதப்ப்டுகிறது.

கொசுறு செய்தி
இத்தாலியை சேர்ந்த டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனம் அதே நாட்டை சேர்ந்த லம்போர்கினி சூப்பர் கார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. லம்போர்கினி நிறுவனம் ஆடி கார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆடி கார் நிறுவனம் உலகின் மாபெரும் வாகன தயாரிப்பு குழுமமாக விளங்கும் ஃபோக்ஸ்வேகன் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








