எம்ஃப்ளக்ஸ் ஒன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கின் சீர்த்திருத்தப்பட்ட மாடல் அறிமுகம்!
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடல் எம்ஃப்ளக்ஸ் ஒன். அட்டகாசமான டிசைன் மற்றும் அசத்தலான தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில்,
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடல் எம்ஃப்ளக்ஸ் ஒன். அட்டகாசமான டிசைன் மற்றும் அசத்தலான தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த சூப்பர் பைக் பல்வேறு விதத்திலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஃப்ளக்ஸ் ஒன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் கையாள்வதற்கு ஏதுவாகவும், ஓட்டுவதற்கு சிறப்பான அம்சங்களுடன் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின் இருக்கையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்விங் ஆர்ம் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மறுவடிவமைப்பு பெற்ற ஸ்ப்ராக்கெட், புதிய முன்புற டிஸ்க் பிரேக், புதிய மட்கார்டு மற்றும் புதிய பெல்லி பேன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், பைக்கின் ஏரோடைனமிக் சிறப்பாக இருப்பதால் செயல்திறன் மேம்பட்டதாக இருக்கும்.

புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கில் த்ரீ ஃபேஸ் ஏசி இன்டக்ஷன் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் லிக்யூடு கூல்டு எனப்படும் திரவ குளிர்விப்பு அமைப்பை பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் 9.7 kWh திறன் கொண்ட சாம்சங் செல்கள் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 80.4 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வெளிப்டுத்தும். எனினும், விற்பனைக்கு செல்லும் பைக்குகளில் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 75 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மின் மோட்டார் சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்ப்டடு பின்புற சக்கரங்களுக்கு ஆற்றல் செலுத்தப்படுகிறது. இந்த பைக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். அத்துடன், மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையை வாய்ந்தது.

இந்த பைக்கில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். நெடுஞ்சாலையில் மணிக்கு 80 கிமீ என்ற சராசரி வேகத்தில் செல்லும்போது 150 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த சூப்பர் பைக்கின் பேட்டரியை 30 நிமிடங்களில் 85 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றும் குயிக் சார்ஜ் வசதியும் உள்ளது.

இந்த சூப்பர் பைக்கின் ஸ்டான்டர்டு மாடலில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, இந்த பைக்கின் இருசக்கரங்களிலும் பிரெம்போ நிறுவனத்தின் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக் 169 கிலோ எடை கொண்டது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக், 800சிசி பெட்ரோல் சூப்பர் பைக்குகளுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருப்பது ஆகச் சிறந்த விஷயம். மேலும், நகர்ப்புற பயன்பாட்டில் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதும் இதற்கு வலு சேர்க்கும் விஷயம். மேலும், டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் மிகச் சிறந்த தேர்வாகவும் இருக்கிறது.

மொத்தமாக 499 எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்குகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதாக எம்ஃப்ளக்ஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதில், 199 யூனிட்டுகள் இந்தியாவிலும், 300 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்து வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








