சூப்பர் பைக் தயாரிப்பில் களமிறங்கும் 'க்ரூஸர்' ஸ்பெஷலிஸ்ட் ஹார்லி டேவிட்சன்!!
க்ரூஸர் ரக பைக் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் நிறுவனம், சூப்பர்ஸ்போர்ட்ஸ் ரக பைக் தயாரிப்பில் களமிறங்க இருக்கிறது. 2020ம் ஆண்டு 1250சிசி ரகத்தில் முதல் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்க
உயர் வகை க்ரூஸர் ரக பைக் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் நிறுவனம், சூப்பர்ஸ்போர்ட்ஸ் ரக பைக் தயாரிப்பில் களமிறங்க இருக்கிறது. ஆட்டோமொபைல் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கும் இந்த செய்தி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அந்த நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களுமே, அடிப்படையில் க்ரூஸர் ரகத்தை சேர்ந்தவையாக இருக்கின்றன.

இந்த நிலையில், சூப்பர்ஸ்போர்ட்ஸ் ரக பைக் தயாரிப்பிலும் களமிறங்க இருக்கிறது ஹார்லி டேவிட்சன். அத்துடன், 500சிசி முதல் 1,250சிசி வரைியலான ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டு 1250சிசி ரகத்தில் முதல் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த புதிய மோட்டார்சைக்கிள் முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய அட்வெனச்சர் டூரர் ரக மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

மேற்கண்ட மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி, 975சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக சூப்பர் பைக்கையும் 2020ம் ஆண்டு ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத்தொடார்ந்து, பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்களில் ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக் மாடலகளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹார்லிடேவிட்சன் 975சிசி ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலானது வி-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். நேக்கட் ஸ்போர்ட்ஸ் டிசைனில் வரும் இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள், குறைவான அளவு ஃபேரிங்குகள், பிரத்யேக பெட்ரோல் டேங்க் கிளாடிங், இரட்டை இருக்கை அமைப்பு,கேனிஸ்ட்டருடன் கூடிய புகைப்போக்கி அமைப்பு, குட்டையான வால் அமைப்புடன் வர இருக்கிறது.

மேலும், முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும். அலாய் வீல்கள், இரட்டை டிஸ்க்குடன் முன்புற பிரேக் சிஸ்டம், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

யமஹா எம்டி-01, கவாஸாகி இசட்900, டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் இது போட்டி போடும். க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டைவிட்டு தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்காக பிற ரகத்திலும் மிக தீவிரமாக களமிறங்க உள்ளது ஹார்லி டேவிட்சன். எனவே, இனி க்ரூஸர் ஸ்பெஷலிஸ்ட் என்பதையும் தாண்டி செல்ல இருக்கிறது ஹார்லி டேவிட்சன்.

இந்தியாவில் 500சிசிக்கும் குறைவான ரக மோட்டார்சைக்கிள்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








