வீரப்பன கூட இந்த அளவுக்கு தேடல.. கர்நாடக போலீசாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் ஒரு ஸ்கூட்டர்
635 முறை போக்குவரத்து விதிமீறல்களில் சம்பந்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்றை, கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கான அபராத தொகை 63,500 ரூபாய்!!
635 முறை போக்குவரத்து விதிமீறல்களில் சம்பந்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்றை, கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கான அபராத தொகை 63,500 ரூபாய்!! அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள நரசிம்மராஜா பகுதி போக்குவரத்து போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த ஒருவரை, போலீசார் நிறுத்தினர் (ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்-KA 09 HD 4732).

போக்குவரத்து விதிகளை மீறியதாக எந்த ஒரு வாகனத்தை நிறுத்தினாலும், அந்த வாகனத்தின் பதிவு எண்ணை, தங்களிடம் உள்ள டேட்டாபேஸ் உடன் ஒப்பிட்டு பார்ப்பது போலீசாரின் வழக்கம். அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே ஏதேனும் வழக்குகள் பதிவாகியிருந்தால், இதன்மூலமாக கண்டறியப்படும்.

அதன்படி ஹெல்மெட் அணியாமல் இருந்த நபர் ஓட்டி வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் பதிவு எண்ணை, தங்களிடம் உள்ள டேட்டாபேஸ் உடன் வழக்கம் போல போலீசார் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது.

ஏனெனில் சிக்னலில் நிற்காமல் சென்றது, ஹெல்மெட் அணியாமல் பயணித்தது என அந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், 635 முறை போக்குவரத்து விதிமீறல்களில் சம்பந்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதற்கான ஒட்டுமொத்த அபராத தொகை 63,500 ரூபாய்!!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிவதற்காக, ஒரு சில சிக்னல்களில் சிசிடிவி கேமராக்களையும் போலீசார் வைத்துள்ளனர். அதன் உதவியுடன் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சிசிடிவி கேமரா பூட்டேஜ்கள் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்து விட்டனர்.

ஆனால் போலீசார் நிறுத்திய உடனேயே, ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர், அதனை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார். தற்போது அந்த ஸ்கூட்டரின் உண்மையான உரிமையாளரை கண்டறிய போலீசார் முயன்று வருகின்றனர். அத்துடன் அபராதத்தை வசூலிக்க, வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கப்பட்டுள்ளது. அதனை ஏலத்தில் விட்டால், ரூ.20-25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும். அதுதவிர அந்த ஸ்கூட்டருக்கு இன்சூரன்ஸ் வேறு இல்லாமல் உள்ளது.

சட்டப்படி பார்த்தால், இன்சூரன்ஸ் இல்லாமல் எந்த ஒரு வாகனத்தையும் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அபராத தொகையை வசூல் செய்வதற்காக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர், மதுபிரசாத் என்பவரால், கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரேதான் அந்த ஸ்கூட்டரை தற்போதும் வைத்திருந்தாரா? அல்லது பெயரை மாற்றாமல் யாருக்காவது விற்பனை செய்து விட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

எனவேதான் அந்த ஸ்கூட்டரின் உண்மையான 'ஓனர்ஷிப்' தற்போது யாரிடம் உள்ளது? என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் அவரிடம் அபராத தொகையை வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
Image Courtesy: Starofmysore
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications