ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதி அறிமுகம்!
வரும் ஏப்ரல் மாதம் முதல் 125சிசி ரகத்திற்கு மேலான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது.
ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த பிப்ரவரியில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தம் புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக், மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதர 160சிசி ரக ஹோண்டா பைக்குகளைவிட தோற்றத்தில் மிரட்டலான இந்த புதிய மாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த சூழலில், வரும் ஏப்ரல் மாதம் முதல் 125சிசி ரகத்திற்கு மேலான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதனை கருதி, தற்போது ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கின் ஏபிஎஸ் அல்லாத மாடல் ரூ.79,768 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் நிலையில், இந்த புதிய மாடல் ரூ.87,776 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் மாடல் ரூ.8,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

ஏபிஎஸ் அல்லாத மாடலுக்கும் ஏபிஎஸ் மாடலுக்கும் தோற்றத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஜிட்டல் கடிகாரம், பராமரிப்பு கால நினைவூட்டும் வசதி, ஹசார்டு லைட் சுவிட்ச், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளை அளிக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் 162.71சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.93 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாகஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. 17 அங்குல சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொண்டுள்ளது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக் மேட் ஃப்ராஸன் சில்வர் மெட்டாலிக், பியர்ல் ஸ்பர்டன் ரெட், பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் மற்றும் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications