இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!
இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிள் விசேஷ வண்ணக் கலவையில் வந்துள்ளது. இது லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. மொத்தமாக 300 யூனிட்டுகள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதில், ஒரு மோட்டார்சைக்கிள் மட்டுமே இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

கேண்டி புளூ மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 30 மணி நேர மனித உழைப்பில் இந்த மோட்டார்சைக்கிளுக்கு வர்ணப் பூச்சு பணி செய்யப்படுவதுதான் இந்த லிமிடேட் எடிசன் மாடலின் முக்கிய சிறப்பு.

இந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் 23 கேரட் தங்கத்தில் ரோட்மாஸ்டர் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருப்பது மற்றொரு முக்கிய அம்சம்.

புதிய இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளில் 1,811சிசி தண்டர்ஸ்ட்ரோக் 111 வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விலை உயர்ந்த க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளில் ஏராளமான சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. சாதாராண ரோட்மாஸ்டர் மாடலைவிட கூடுதல் வசதிகளும் உள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி விளக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 300 வாட் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதி என விலை உயர்ந்த கார்களில் இருக்கும் வசதிகளை பெற்றிருக்கிறது.

இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் 433 கிலோ எடை கொண்டது. இந்த மோட்டார்சைக்கிளில் பொருட்கள் மற்றும் உடைமைகளை வைத்து எடுத்துச் செல்வதற்காக 140 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் 300மிமீ விட்டமுடைய டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக கொடுக்கப்படுகிறது. 16 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட் உள்ளிட்ட மிக விலை உயர்ந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ரகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளுக்கு ரூ.48 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








