சபாஷ்.. சரியான போட்டி.. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை கிண்டலடிக்கும் கவாஸாகி விளம்பரத்தால் பரபரப்பு
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் அதிகப்படியான விலை காரணமாக, புதிய கவாஸாகி நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கிற்கு, ரசிகர்கள், பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் அதிகப்படியான விலை காரணமாக, புதிய கவாஸாகி நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கிற்கு, ரசிகர்கள், பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இந்த சூழலில், ஜி 310 ஆர் பைக்கை கிண்டல் செய்து வெளியாகியுள்ள நின்ஜா 300 பைக்கின் விளம்பரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் நிறுவனங்களின் கூட்டணியில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த 2 மாடல்களும் உற்பத்தியாகி வருகின்றன.

இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், இந்தியாவில் மட்டும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய 2 பைக்குகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர்.

நீண்ட கால தாமதத்திற்கு பின்னர், ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகளை, கடந்த 18ம் தேதிதான் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, அந்த பைக்குகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் மத்தியில் அதிருப்தி நீடிக்கிறது.

அந்த பைக்குகளின் விலைதான் அதிருப்திக்கு காரணம். பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய ஆன் ரோடு விலை ரூ.3.78 லட்சம். ஆனால் அமெரிக்காவில் இந்த பைக்கின் ஆன் ரோடு விலை இந்திய மதிப்பில் ரூ.3.27 லட்சம் மட்டுமே. இந்த பைக்கின் விலை அமெரிக்காவை விட இந்தியாவில் ரூ.51 ஆயிரம் அதிகம்.

அதேபோல் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் இந்திய ஆன் ரோடு விலை 4.35 லட்ச ரூபாய். ஆனால் அமெரிக்காவில் இந்த பைக்கின் ஆன் ரோடு விலை ரூ.3.93 லட்சம் மட்டுமே. அதாவது இந்த பைக்கின் விலை அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில், ரூ.42 ஆயிரம் அதிகம்.

இத்தனைக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310 மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய 2 பைக்குகளும் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்துதான் அமெரிக்காவுக்கு கொண்டு சென்று இந்த பைக்குகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்கிறது. அப்படியானால் அங்கு வரி வேறு விதிக்கப்படும்.

அப்படி இருக்கையில் இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவில் மட்டும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளின் விலை எப்படி குறைவாக உள்ளது? என இந்தியாவை சேர்ந்த பைக் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அத்துடன் ஒரு இந்திய தயாரிப்பு, எப்படி இந்தியாவை காட்டிலும் வெளிநாட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது? என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது. இந்தியாவில் இப்படி அதிக விலையை நிர்ணயித்தது ஏன்? என்பதற்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் தெளிவான பதிலை தரவில்லை.

இதனால் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய 2 பைக்குகளுக்கு எதிரான மனநிலை, இந்தியர்களிடையே ஏற்பட்டது. இந்தியாவில் ஏதேனும் ஒரு சம்பவத்தை கிண்டல் செய்ய வேண்டுமென்றால், மீம்ஸ்களை களமிறக்குவது வழக்கம். ஆட்டோமொபைல் துறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகளின் அதிகப்படியான விலையை கிண்டல் செய்யும் விதமாகவும், அந்த பைக்குகளை அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்வதை கிண்டல் செய்யும் விதமாகவும், இங்கு மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறந்து வருகின்றன.

ரசிகர்கள் மற்றும் பைக்கர்கள் ஆகியோர்தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தை கிண்டல் அடித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தை கிண்டல் செய்யும் பணியில், கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் டீலர் ஒருவரும் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் லான்ச் செய்யப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து (கடந்த 20ம் தேதி), அப்டேட் செய்யப்பட்ட புதிய 2018 நின்ஜா 300 ஏபிஎஸ் பைக் மாடலை, கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் களத்தில் இறக்கி விட்டது.

ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லாத பழைய நின்ஜா 300 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.60 லட்சம். ஆனால் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்ட புதிய நின்ஜா 300 பைக்கின் விலை வெறும் ரூ.2.98 லட்சம்தான். அதாவது 62 ஆயிரம் ரூபாயை கவாஸாகி நிறுவனம் அதிரடியாக குறைத்தது.

இதன்மூலம் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 1,000 ரூபாய் குறைந்தது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.99 லட்சம் (இந்திய ஆன் ரோடு விலை ரூ.3.78 லட்சம்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கவாஸாகி நின்ஜா ஏபிஎஸ் 300 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.98 லட்சம்தான். இதன் ஆன் ரோடு விலை சுமார் ரூ.3.67 லட்சம் மட்டுமே. ஆன்ரோடு விலையில் பார்த்தால், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட கவாஸாகி நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கின் விலை ரூ.11 ஆயிரம் குறைவு.

இத்தனைக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கில், பேரலல் டிவின் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. விலை குறைவு, பேரலல் டிவின் சிலிண்டர் போன்ற காரணங்களால், ஜி 310 ஆர் பைக்கை, கவாஸாகி நின்ஜா வெகுவாக பலவீனப்படுத்தியது.

இதனால்தான் ரசிகர்கள் மற்றும் பைக் ஆர்வலர்கள் மத்தியில், கவாஸாகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கிற்கு, ஆதரவு பெருகி வருகிறது. இந்த சூழலில்தான் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை, கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் டீலர் ஒருவர் கிண்டல் அடித்துள்ளார்.

நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கை பிரபலப்படுத்துவதற்காக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிங்கிள் சிலிண்டர் பைக்கை ஏன் வாங்க வேண்டும்? அதே விலையில் உங்களால் டிவின் சிலிண்டர் பைக்கை வாங்க முடியும் எனும்போது, ஏன் சிங்கிள் சிலிண்டர் பைக்கை வாங்க வேண்டும்? என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

நின்ஜா 300 டிவின் சிலிண்டர். ஆனால் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் சிங்கிள் சிலிண்டர்தான். எனவே இந்த விளம்பரத்தில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் கூட, வெளிப்படையாக அந்த பைக்கை கிண்டல் அடிக்கும் விதத்தில்தான் உள்ளது.

கவாஸாகி நின்ஜா 300 ஏபிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் ஆகிய 2 பைக்குகளின் இன்ஜின்களையும் ஒப்பிட்டு பார்த்தால், கவாஸாகி நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கே அதிக சக்தி வாய்ந்தது என்பது எளிதில் நிரூபணம் ஆகிறது.

கவாஸாகி நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கில், 300 சிசி, பேரலல் டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 11,000 ஆர்பிஎம்மில் 38 பிஎச்பி பவர் மற்றும் 10,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

ஆனால் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இன்ஜின், வெறும் 34 பிஎஸ் பவர், 28 என்எம் டார்க் திறனை மட்டுமே வழங்கக்கூடியது. இந்த 2 பைக்குகளுக்கும் மற்றொரு முக்கியமான வித்தியாசமும் உள்ளது. கவாஸாகி நின்ஜா 300 ஏபிஎஸ் பைக், ஃபுல்லி ஃபேர்டு பைக். ஆனால் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் நேக்கட் ரக பைக் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








