கவாஸாகி நின்ஜா 300 பைக் விலை ரூ.1 லட்சம் வரை குறைகிறது!!
கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட இருக்கிறது. கவாஸாகி நின்ஜா 300 பைக் தயாரிப்பில் இந்திய சப்ளையர்களிடம் இருந்து அதிக உதிரிபாகங்களை பெறுவதற்கு கவாஸாகி நிறுவனம் முடி
கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்போர்ட்ஸ் ரக பைக் மார்க்கெட்டில் கவாஸாகி பைக்குகள் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், மதிப்பையும் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான விற்பனை வெகுவாக அதிகரித்து வருவதை மனதில் கொண்டு அண்மையில் கவாஸாகி நிறுவனம் நின்ஜா 400 பைக்கை அறிமுகம் செய்தது.

விற்பனையில் இருந்து வரும் நின்ஜா 300 பைக் மாடலுக்கு மாற்றாக நின்ஜா 400 நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு பைக் மாடல்களும் விற்பனை செய்யப்படும் என்று கவாஸாகி தெரிவித்தது.

இந்த நிலையில், கவாஸாகி நின்ஜா 300 பைக் தயாரிப்பில் இந்திய சப்ளையர்களிடம் இருந்து அதிக உதிரிபாகங்களை பெறுவதற்கு கவாஸாகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, இந்த பைக்கின் விலை மிக கணிசமாக குறைய இருக்கிறது.

தற்போது கவாஸாகி நின்ஜா 300 பைக் ரூ.3.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், உள்ளூர் உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும்போது, இந்த பைக்கின் விலை ரூ.2.50 லட்சம் முதல் ரூ.2.70 லட்சம் என்ற அளவில் குறையும்.

இதனால், கவாஸாகி நின்ஜா 300 பைக்கிற்கான வரவேற்பு கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. போட்டியாளர்களுக்கும் இது மிக சவாலான மாடலாக அமையும். ஏனெனில், முக்கிய போட்டியாளர்கள் ரூ.3 லட்சத்திற்கும் மேல் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

கவாஸாகி நின்ஜா 300 பைக்கில்ல இருக்கும் 296சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் அதிகபட்சமாக 39 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்நந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதுவரை கொடுக்கப்படாததுதான் முக்கிய குறையாக இருக்கிறது. அதனையும் கூடிய விரைவில் கவாஸாகி நிறுவனம் பரிசீலித்து ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்கும் என்றும் தகவல்லகள் கூறுகின்றன.

உள்நாட்டு உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக் வரும் அடுத்த ஒரு சில மாதங்களில் தீபாவளிக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வரும்போது கேடிஎம் ஆர்சி390 பைக், டிவிஎஸ் அப்பா்சி ஆர்ஆர் 310 மற்றும் விரைவில் வரும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் ஆகிய பைக்குகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








